ஜோதிடம்

வாழ்வில் எல்லா வித நலன்களை தரும் யோகங்கள்

ஒவ்வொரு ஜாதகத்திலும் குறைந்தது ஐந்து யோகங்கள் இருந்தால்… இரண்டு தோஷமாவது உடன் காணப்படும். அது தான் விதி எனினும், தோஷங்களை விட யோகங்கள் அதிகமாகக் காணப்படுமாயின் நிச்சயம் அந்த ஜாதகத்தை ராஜயோக ஜாதகம் என்றே கூட சொல்லலாம். அந்த வகையில் ஒருவர் ஜாதகத்தில் கீழ்கண்ட யோகங்கள் குறிப்பிட்டு இருக்குமாயின் அவர் வாழ்வில் எல்லா வித நலன்களையும் பெறுவார். அந்த வகையில் சில சிறப்பான யோகங்கள் பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்.

1. கஜ கேசரி யோகம்: ஒரு ஜாதகத்தில் சந்திரனுக்கு குரு கேந்திரம் எனும் 4-ம் வீட்டில் அல்லது 7-ம் வீட்டில், அல்லது 10-ம் வீட்டில் இருந்தால் இந்த யோகம் உண்டாகும். இதனால் அரசியலில் உயர் பதவி, அரசாங்கத்தில் உயர் பதவி, கல்வியில் உயர்வு, ஆகியவை ஏற்படும். மேலும், சொந்தமாகப் பல வீடுகள் மற்றும் வாகன யோகங்களையும் தரும். எதிரிகள் கூட இவர்களிடத்தில் தோற்றுப் போவார்கள். எனினும், இந்த யோகம் சிறப்பாக இருக்க குரு ஆட்சி அல்லது உச்சம் பெறுதல் வேண்டும் அல்லது சந்திரன் ஆட்சி அல்லது உச்சம் பெறுதல் வேண்டும். சந்திரன் அல்லது குரு இருவரில் ஒருவர் பகை வீட்டில் இருப்பது அல்லது நீச்ச பலம் பெறுவது, பாவ கிரகங்களுடன் இணைந்து பாவ கிரகங்களின் பார்வை பெற்று இருப்பது… போன்ற இவ்வமைப்புகள் இந்த யோகத்தின் பலனை குறைத்து விடலாம்.

2. குரு மங்கள யோகம்: ஜாதகத்தில் குருவும், செவ்வாயும் சேர்ந்து நின்றாலோ அல்லது, ஒருவருக்கொருவர் எதிரில் நின்றாலோ, இந்த யோகம் ஏற்படும். இந்த அமைப்பில் பிறந்தவர்கள், சிறப்பான செல்வாக்கை எதிர்காலத்தில் பெறுவார்கள். எனினும், இந்த யோகம் சிறப்பாக இருக்க… செவ்வாய் அல்லது குரு பகவான் ஆட்சி அல்லது உச்சம் பெறுதல் வேண்டும். அதை விடுத்து குரு அல்லது செவ்வாய் என இருவரில் ஒருவர் பகை வீட்டில் இருப்பது அல்லது நீச்ச பலம் பெறுவது, பாவ கிரகங்களுடன் இணைந்து பாவ கிரகங்களின் பார்வை பெற்று இருப்பது… போன்ற இவ்வமைப்புகள் இந்த யோகத்தின் பலனை குறைத்து விடலாம்.

3. பத்ர யோகம்: ஜாதகத்தில் ஒருவருடைய லக்னத்துக்கு 4, 7, 10 – ம் இடத்தில் புதன் ஆட்சியாக அல்லது உச்சமாக இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இந்த யோகம் உள்ளவர்கள் சிறந்த கல்வி அறிவு உள்ளவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்ட அமைப்பிலிருக்கும் புதனை, குரு பார்த்தால் பெரும் கல்விமானாகப் பெயர் எடுத்து, கல்வி நிறுவனங்கள் நிறுவி, கல்விப் பணி ஆற்றுவார்கள். இது ஒரு சிறப்பான யோகம் ஆகும். (எனினும், புதன் பாவ கிரகங்களுடன் சேர்ந்து பாவ கிரகங்களின் பார்வை இல்லாமல் இருத்தல் அவசியம்).

4. ஹம்ஸ யோகம்: ஜாதகத்தில், குரு லக்னத்துக்கு கேந்திரம் எனப்படும் 4,7,10 -ம் இடத்திலிருந்து, உடன் அந்த குருவானவர் உச்ச பலம் அல்லது ஆட்சி பலம் பெற்று நின்றால், இந்த யோகம் மிகச் சிறப்பாக ஏற்படும். ஜாதகர் இந்த யோகத்தின் பலனாக நீதிமானாக இருப்பார். சமூகத்தில் மதிப்பும், மக்களிடத்தில் செல்வாக்கையும் கொண்டு ஜாதகர் சிறப்பாக இருப்பார். அற்புதமான வாழ்க்கை வாழ்வார்.

5. அரசாளும் யோகம்: ஒரு ஜாதகத்தில் சூரியனும் செவ்வாயும் பலம் பெற்று, லக்னத்துக்கு 6, 7, 9 – ம் இடத்து அதிபதிகள் ஆட்சி பெற்றிருந்தால், தன்னுடைய சிறிய வயதிலேயே அரசியலில் பெரும்புகழ் பெற்று அரியணையில் அமர்வார். இதுவும் கூட சிறப்பான நன்மைகள் தரும் யோகம் ஆகும்.

6. கிரகமாலிகா யோகம்: ஒரு ஜாதகத்தில் லக்னத்துக்கு இருபுறமும் வரிசையாக கிரகங்கள் இருந்தால் இந்த யோகம் ஏற்படும். வாழ்க்கையில் உயர்ந்து சமூக அந்தஸ்துடன் ஜாதகர் காணப்படுவார்.

7. சந்திரமங்கள யோகம் : ஜாதகத்தில், செவ்வாய், சந்திரனுக்கு அதாவது ராசிக்குக் கேந்திரம் எனப்படும் 1, 4, 7, 10 – வது வீட்டில் நின்றால் இந்த யோகம் ஏற்படும். இந்த யோகம் சமூகத்தில் அந்தஸ்தையும், நன்மதிப்பையும் தரும் யோகம் ஆகும். அதிலும், மேற்படி அவ்வாறு கேந்திரங்களில் இருக்கும் செவ்வாய் அல்லது சந்திரன் ஆட்சி அல்லது உச்சம் பெற்று… குறிப்பாகப் பாவர் சேர்க்கை இல்லாமல்… சுப கிரகங்களால் பார்க்கப்பட்டால் ஜாதகர் சிறப்பானதொரு அந்தஸ்த்தைப் பெறுவார்.

8. தர்ம கர்மாதிபதி யோகம்: ஒருவருடைய பிறப்பு ஜாதகத்தில் அவரின் லக்னத்துக்கு ஒன்பதாம் வீட்டு அதிபதியும் பத்தாம் வீட்டு அதிபதியும் சேர்ந்து காணப்பட்டால் இந்த யோகம் ஏற்படும். அதிலும், அப்படியாகச் சேர்க்கை பெறும் 9 அல்லது 10 ஆம் அதிபதிகள் பாவர் சேர்க்கை இன்றி உச்சம் அல்லது ஆட்சி என்கிற நிலையில் சுப கிரகங்களால் பார்க்கப்பட்டால், ஜாதகர் சிறப்பானதொரு அந்தஸ்தை பெறுவார். தொழில் அல்லது வியாபார ரீதியாகக் கூட வெற்றிகளை குவிப்பார். சிலருக்கு அரசாங்கத்தில் உயர்ந்த உத்யோகம் கூட அமையப்பெற இடம் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 9 =

Back to top button
error: