
புது டெல்லி: ‘ஆபரேஷன் சிந்து’ நடவடிக்கை மூலம் இதுவரை 1,117 இந்தியர்கள் ஈரானில் இருந்து திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் சமூக ஊடகமான ‘X’ இல் தெரிவித்தார்.
“ஜூன் 21, சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு மஷாத்தில் இருந்து ஒரு சிறப்பு விமானம் புதுதில்லியில் தரையிறங்கியது. இந்த விமானத்தில் 290 இந்தியர்கள் ஈரானில் இருந்து பாதுகாப்பாக தாயகம் திரும்பினர்,” என்று அவர் கூறினார்.
“இதன் மூலம், இதுவரை 1,117 இந்தியர்கள் ஈரானில் இருந்து திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.
#OperationSindhu gains momentum.
290 Indian nationals have returned home safely from Iran on a special flight from Mashhad that landed in New Delhi at 2330 hrs on 21 June 2025.
With this, 1,117 Indian nationals have been evacuated from Iran. pic.twitter.com/FScyeKslzw
— Randhir Jaiswal (@MEAIndia) June 21, 2025
இந்தியா திரும்பியவர்களில் மாணவர்களும் அடங்குவர். பாதுகாப்பாக தரையிறங்கிய குடிமக்கள், ஊடகங்களுக்கு பதிலளித்து இந்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தனர்.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் காரணமாக மத்திய கிழக்கில் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
முன்னதாக, மோதல் நிறைந்த ஈரானில் இருந்து இந்தியர்களை திரும்ப அழைத்து வர இந்திய அரசு ‘ஆபரேஷன் சிந்து’ திட்டத்தைத் தொடங்கியது. இஸ்ரேலில் இருந்தும் இந்தியர்களை திரும்ப அழைத்து வர இதே போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.