
புற்றுநோய், இன்று உலக மக்களை அச்சுறுத்தும் ஒரு கொடிய நோய். உயிர் பிழைப்பதற்கான நம்பிக்கையை இழக்க வைக்கும் இந்த நோய், இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பாரபட்சம் பார்க்காமல் உயிரைப் பறிக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யா ஒரு நற்செய்தியை அறிவித்துள்ளது. புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி ஒன்றை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.
RT இந்தியா வெளியிட்டுள்ள தகவலின்படி, என்டோரோமிக்ஸ் எனப்படும் mRNA அடிப்படையிலான இந்த தடுப்பூசி மருத்துவ பரிசோதனைகளில் 100% வெற்றி பெற்றுள்ளது. இது புற்றுநோய் கட்டிகளைக் கணிசமாகக் குறைத்து, புற்றுநோய் செல்களை அழிக்கும் வல்லமை கொண்டது என்று கூறப்படுகிறது. கோவிட் தடுப்பூசிகளில் பயன்படுத்தப்பட்ட அதே அதிநவீன mRNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி, கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு போன்ற சிகிச்சைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. ஒவ்வொரு புற்றுநோய் நோயாளியின் தேவைக்கேற்ப இது சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், சோதனைகளில் எந்தப் பக்க விளைவுகளும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் தேசிய மருத்துவ ஆராய்ச்சி கதிரியக்க மையம், ரஷ்ய அறிவியல் அகாடமி மற்றும் எங்கல்ஹார்ட் மூலக்கூறு உயிரியல் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளன. மருத்துவ பரிசோதனைகள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சகத்தின் இறுதி ஒப்புதலுக்காக இது காத்திருக்கிறது. விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தடுப்பூசி வெற்றி பெற்றால், புற்றுநோயியல் துறையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும். மேலும், மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடியும்.