அகமதாபாத்தில் இன்று நடந்த விமான விபத்தில் 242 பேர் உயிரிழப்பு..!
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று நடந்த விமான விபத்தில் 242 பேர் உயிரிழந்தனர். விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் விபத்துக்குள்ளானது. உயிர் பிழைத்தவர்கள் யாரும் இல்லை என்று அகமதாபாத் காவல்துறை ஆணையர் ஜி.எஸ். மாலிக் சர்வதேச ஊடக அமைப்பான தி அசோசியேட்டட் பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார். இருப்பினும், போயிங் ட்ரீம்லைனர் விபத்தில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை இப்போது கூற முடியாது என்றும், ஆனால் அது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்றும் அவர் கூறினார்.
விபத்து நடந்த நேரத்தில் விமானத்தில் 232 பயணிகளும் 10 பணியாளர்களும் இருந்தனர். விமானத்தில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் பிரஜைகள், ஏழு போர்த்துகீசியர்கள் மற்றும் ஒரு கனடியர் இருந்தனர். அகமதாபாத்தின் மேகனிநகர் பகுதியில் அமைந்துள்ள தர்பூரில் விமானம் விபத்துக்குள்ளானது. அவசர குழுக்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. விபத்துக்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் கண்டறியவில்லை.
அந்த விமானத்தில் பயணம் செய்த முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி இறந்துவிட்டதாக குஜராத் அரசு அறிவித்தது.
Posted in: இந்தியா