×

அன்னபூரணியின் அன்ன நியதி

Link copied to clipboard!

அன்னபூரணி தேவி, பார்வதி சக்தியின் ஓர் அம்சமானவள். அன்னம் என்றால் உணவு எனவும் பூரணம் என்றால் முழுமை, நிறைவு எனவும் பொருள்படும். ஈசனின் ஒருபாதியான பார்வதி, அன்னபூரணியாக இருந்து உலக உயிர்களுக்கு நிறைவான உணவை தந்தருள்கிறார்.

அன்னபூரணி எல்லா உயிர்களுக்கும் போதுமான உணவை அளிக்கிறாள். அவள் எப்போதும் தன் குழந்தைகளிடம் வேறுபாடு காட்டுவதில்லை. எல்லா குழந்தைகளுக்கும் தேவையான உணவுகளை அவள் தர தவறியதில்லை. ஆனால் அவளின் குழந்தைகளில் மூத்தவர்களான மனிதர்கள் மட்டும் மற்ற குழந்தைகளின் உணவுகளைத் தட்டிப் பறித்து விடுகின்றனர். இதனால் தான் இன்று உலகில் ஏழை மனிதர்களும் மற்ற உயிர்வாழிகளும் உணவின்றி வாடுகின்றனர்.

Advertisement

உலகில் உணவுக்குப் பஞ்சமில்லை; ஆனால் மனிதர்களிடம் “கொடுக்கும் மனப்பான்மை” பஞ்சமாகி விட்டதே இந்த கலியுகத்தின் கசப்பான உண்மை. உணவின்றி உயிர்கள் வாழ இயலாது. உணவு என்பது உலக உயிர்களுக்கு அடிப்படைத் தேவையாகும். ஆகையால் இந்துதர்மத்தைப் பொறுத்தவரை உணவு மதிக்கத்தக்கது. உணவை வீணடித்தல் தீவினையாக கருதப்படுகின்றது. அதேவேளை உணவை பகிர்ந்து உண்ணுதல் பெரிதளவும் போற்றப்படுகின்றது. தர்மசாஸ்திரங்களைப் புரட்டிப் பார்த்தால் உணவை பகிர்ந்து உண்ணுவது எவ்வளவு மேலாகப் போற்றப்படுகிறது என்பதை நாம் காணலாம்.

தானத்தில் சிறந்தது அன்ன தானம்

அன்னபூரணி தேவி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வீற்றிருக்கிறாள். அட்சய திருதியை திருநாளை அன்னபூரணியின் அவதார நன்னாளாக கடைப்பிடிக்கிறோம். இந்நன்னாளில் தேவைபடுவோருக்கு உணவு வழங்குவது மிகவும் உயர்ந்த செயலாகும். தங்கத்தையும் பணத்தாளையும் கொண்டு சென்று கோவிலில் கொட்டுவதால் அன்னபூரணி மனம் குளிரமாட்டாள். அதே பணத்தைக் கொண்டு தேவைபடுவோருக்கு ஒரு வேளை வயிறு நிறைய உணவு கொடுத்தாலும் அவள் மனம் மகிழ்ந்து அருள்புரிவாள்.

Advertisement

“பசித்தவருக்கு உணவு வழங்குபவனை பசி என்று சொல்லப்படும் கொடிய நோய் எந்த பிறவியிலும் வாட்டாது” என்று தர்மநூல்கள் குறிப்பிடுகின்றன.

தானங்களில் சிறந்த தானமாக அன்னதானம் அமைந்துள்ளது. அன்னதானத்தின் இன்றியமையாத இயல்பைப் பற்றி பத்ம புராணம் பகர்கின்றது. பார்வதியின் அம்சமாகிய அன்னபூரணியைத் தொழும் போது ஈஸ்வரனான சிவனையும் கருத்தில் கொண்டு வழிபட வேண்டும். “மாதா பார்வதி தேவி; பிதா தேவோ மஹேஷ்வர:” என்று ஆதிசங்கரர் குறிப்பிடுகிறார். அன்னை பார்வதி உலக உயிர்களின் அன்னை, மகேசுவரனான சிவபெருமான் உலக உயிர்களின் தந்தை என்பதே இதன் பொருள்.

உணவு உட்கொள்ளும் முன் பிரார்த்தனை அவசியம்

Advertisement

ஒவ்வொரு நாளும் நாம் உட்கொள்ளும் உணவு அன்னபூரணி தேவியின் திருவருளாலே நமக்கு கிடைத்தது. அதற்கு நாம் மறவாமல் அவளுக்கு நன்றி சமர்பிக்க வேண்டும். உலகவாழ்க்கைக்கு அன்னையும் தந்தையும் ஆகிய பார்வதி சிவனுக்கு மனமுருகி பக்தியும் நன்றியும் சமர்பிக்கும் வகையில் ஆதிசங்கராச்சாரியர் இயற்றிய அன்னபூரணி ஸ்தோத்திரம் திகழ்கின்றது. அந்த ஸ்தோத்திரத்தின் ஒரு ஸ்லோகம் உணவு உட்கொள்வதற்கு முன்னர் செப்பிக்கவேண்டிய முக்கிய மந்திரமாக அமைந்துள்ளது.

“ஓம் அன்னபூர்ணே சதாபூர்ணே

ஷங்கர பிராண வல்லபே

Advertisement

ஞான வைராக்ய சித்யார்த்தம்

பிக்‌ஷாம் தேஹி ச பார்வதி”

பொருள் – பிரணவ மந்திரம். அன்னபூரணி தேவியே, எப்போதும் நிறைவானவளே. சங்கரனாகிய சிவபெருமானுக்கு உயிரானவளே. எங்களுக்கு (எல்லா மனிதர்களுக்கும்) ஆன்மிக அறிவாற்றல், மனத்தெளிவு, நற்பேறு, ஆன்மிக ஈடேற்றம் ஆகியவற்றை பிச்சையாக தந்தருள்வாய் பார்வதி தாயே.

கண்களை மூடிக் கொண்டு, “அன்னபூரணி தாயே. இன்று உன் திருவருளால் எனக்கு உணவு கிடைத்துள்ளது. இதுபோல எல்லா உயிர்களுக்கும் நிறைவாக உணவு கிடைக்க வேண்டும். சிவன் சக்தியின் பிள்ளைகளாகிய எங்களை நீ எப்போதும் எந்த குறையும் இல்லாமல் காத்தருள்வாயாக” என்றும் பிரார்த்தனை செய்யலாம்.

Advertisement

அன்ன நியதி (உண்ணுதல் நெறிகள்):

1) உணவை வீணாக்க கூடாது – பசித்த போது தான் உணவு உட்கொள்ள வேண்டும். எனவே போதுமான அளவு உணவை தட்டில் போட்டு உட்கொள்ள வேண்டும். இன்னும் பசித்தால் பிறகு சேர்த்துக் கொள்ளலாம்.

2) உணவை பகிர்ந்து உண்ண வேண்டும் – நமக்கு கிடைத்த உணவை நம்முடைய நண்பர்களோடும் சுற்றத்தாரோடும் பகிர்ந்து உண்ணலாம். இது நமக்கிடையே உள்ள ஒரு நல்ல உறவை மேலும் வலுவாக்கும். மற்ற வேளைகளில் நாம் தயாரித்த உணவை அண்டை வீட்டுக்காரர்கள் போன்றவர்களுக்கு கொடுக்கலாம்.

3) அன்போடு வழங்கப்பட்ட உணவை அலட்சியப்படுத்தக் கூடாது – ஒருவர் அன்போடு நமக்கு கொடுக்கும் உணவை நாம் ஏற்றுக் கொண்டு அவருக்கு நன்றி கூறவேண்டும். பிறகு அந்த உணவை இல்லத்தாரோடு பகிர்ந்து உண்ணவேண்டும். இவர் வேண்டாதவர், இவர் கொடுத்த உணவை உண்டால் ‘தீட்டாகிவிடும்’ என்று அந்த உணவை அலட்சியப்படுத்துவது மிகப்பெரிய தீவினை.

4) ஆரோக்கியமற்ற உணவை உண்ண வேண்டாம் – ஆரோக்கியமற்ற உணவை நாமும் உண்ணக் கூடாது மற்றவர்களுக்கும் கொடுக்க கூடாது. உணவை வீணாக்க கூடாது என்ற பட்சத்தில் ஆரோக்கியமற்ற உணவை நாம் உண்ணுதல் நம் உடலைப் பாதிக்கும். உடலை பாதிக்கும் இயல்புடையது ‘அன்னம்’ அல்ல. உடலுக்கு ஊட்டத்தை அளிப்பதே அன்னம் ஆகும். எனவே, அதை நாம் தூக்கிவீசுவதில் எந்தவொரு பிழையும் இல்லை.

5) புலால் உணவுகளைத் தவிர்க்க அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும் – புலால் என்றால் இறைச்சி எனப் பொருள்படும். இறைச்சி என்பது யாதெனில் அது பிறிதொரு உயிரினத்தின் சதை ஆகும். மற்ற உயிரினத்தின் உடலை உண்பதால் அதன் உள்ளுணர்வுகளும் நம் உணர்வுகளில் கலக்கின்றன. இது மனிதர்களிடம் இருக்கும் தெய்வீக குணங்களை முடக்கி மெல்ல மெல்ல மிருக குணங்களை உருவாக்கும். கட்டுப்பாடில்லாத புலால் உணவு நாளடைவில் பெரிய அளவிலான நோய்களை ஏற்படுத்தி மனிதனைக் கொல்கின்றன. மனரீதியிலும் உடல்ரீதியிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் புலால் உணவுகளை குறைத்துக் கொள்வது ஆரோக்கியமாகும். ஆன்மீக வாழ்வில் புலால் உணவுகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆன்மீகப் பயிற்சிக்கு புலால் மறுத்தல் மிக முக்கியமான ஒழுக்கநெறியாகும். மற்றபடி இந்துக்களாகிய நாம் புலால் உணவுகளை குறைத்துக் கொண்டு தாவர உணவுகளை மிகுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். சிலருக்கு புலாலை முழுவதுமாக மறுக்க அடிப்படையான பயிற்சி தேவைபடும். அதனால் தான் நம் முன்னோர்கள் வெள்ளிவிரதம், புரட்டாசிவிரதம் என அறிமுகப்படுத்தினர். ஆகவே முடிந்தவரை சில முக்கிய நாட்களில் விரதமிருந்து புலால் மறுத்தலைக் கடைப்பிடியுங்கள்.

Posted in: ஆன்மீகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Related Posts

flowers for god

தெய்வங்களுக்கு உகந்த மற்றும் பூஜைக்கு ஏற்ற பூக்கள்!!

பூக்கள் அதன் நறுமணத்தால் தெய்வீக வழிபாட்டுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. அதன் அழகான தோற்றம் நமது பக்தியையும் அழகுபடுத்தி விடுகிறது. பூக்கள்…

Link copied to clipboard!
வரலட்சுமி விரதம்

வரம் அருளும் வரலட்சுமி வழிபாடு

பெண்களால் மேற்கொள்ளப்படும் விரதங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், முதன்மையானதாகவும் இருப்பது வரலட்சுமி விரதமாகும். வரலட்சுமி விரதம் அல்லது மகாலட்சுமி விரதம் என்பது…

Link copied to clipboard!
திருஷ்டி பரிகாரங்கள்

திருஷ்டிகளை போக்கும் வழிபாடுகள் – பரிகாரங்கள்

கோபம், பொறாமை, குரோதம், விரோதம், பகைமை போன்ற விஷ எண்ணங்கள் கொண்ட மனம் படைத்தவர்களின் கண்களிலிருந்து வெளிவரும் நச்சுக்கதிர்களுக்கு தோஷங்கள்…

Link copied to clipboard!
யோக நரசிம்மர்

துஷ்ட சக்திகளிடமிருந்து தப்பிக்க உதவும் தெய்வசக்திகள்

உலகில் இருவேறு சக்திகள் இருக்கின்றன. நல்ல, தீயசக்திகள் அவை. தேவர்களுக்கு நேர் எதிரான அசுரர்களும் இருந்ததை புராணங்களில் படித்திருப்பீர்கள். அதுபோல,…

Link copied to clipboard!
error: