ஆரோக்கியம்

குடல் புழுக்களை விரட்டும் யானை திப்பிலி!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்பொழுதும், இனிப்பு சார்ந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளும்போதும், வேறு சில புழுக்கள் மற்றும் கிருமிகள் சுகாதாரமற்ற நீர் மற்றும் கெட்டுப்போன உணவுகள் மூலமாக உடலில் நுழையும்பொழுதும், தங்களை காத்துக்கொள்வதற்காக குடல் புழுக்களும் பெருகுகின்றன. இதனால் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன.

தோலில் தடிப்பு, அரிப்பு, மலவாயில் எரிச்சல் மற்றும் வெடிப்பு, மலச்சிக்கல் அல்லது கழிச்சல், தலையில் பொடுகு, வாயில் புண்கள் மூக்குத்துளை ஓரங்களில் அரிப்பு, முகம் மற்றும் கன்னப்பகுதிகளில் ஒரு வித வெளுப்பு,

வாயில் துர்நாற்றம், மலம் கழிக்கும்பொழுதும், அபானவாயு பிரியும்பொழுதும் துர்நாற்றம், புழுக்கள் இனப்பெருக்க பாதையில் தொற்றை ஏற்படுத்தி வெள்ளைப்படுதல், மாதவிலக்கு திரவம் மற்றும் வெள்ளையில் சிறுசிறு புழுக்கள் வெளியேறுதல்,

சிறுநீர்ப்பாதையில் அரிப்பு, மலவாயைச் சுற்றி துளைகள் ஏற்பட்டு பவுத்திரம், மூலம் உண்டாதல், சில நேரங்களில் அந்த துளைகளிலும் புழுக்கள் வெளியேறுதல் மற்றும் ஆசனவாய் வெடிப்பு ஆகியன புழுக்களால் உண்டாகின்றன.

அது மட்டுமின்றி தொடை இடுக்கு மற்றும் வயிற்றுப்பகுதிகளில் நெறி கட்டுதல், சிறு சுரம், அடிக்கடி குமட்டல், வாந்தி போன்ற சில தொல்லைகளுக்கும் வயிற்றுப்புழுக்கள்தான் காரணம்.

அவசியமற்ற குடற்புழுக்களை நீக்கி, வலிமையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும் மூலிகைதான் யானை திப்பிலி. பைப்பர் சாபா என்ற தாவரவியல் பெயர் கொண்ட, பைபரேசியே குடும்பத்தைச் சார்ந்த கொடிகளின் உலர்ந்த பூ தண்டுகளே, யானை திப்பிலி என்று வழங்கப்படுகின்றன.

நாட்டு மருந்துக்கடைகளில் யானை திப்பிலி விற்பனை செய்யப்படுகின்றன. இதன் தண்டுகளில் பைப்பரின், பைப்பலார்டின், பைப்பலோரின்ஸ் மற்றும் பலவித ஒத்த பியூட்டைல் அமைடுகள் காணப்படுகின்றன.

இவை குடல் பகுதியிலுள்ள மென்மையான சளிச்சவ்வு படலத்தை தூண்டி, குடற்புழுக்களை வெளியேற்றுகின்றன. அது மட்டுமல்லாமல் குடற்பாதையில் உறுத்தலை ஏற்படுத்தும் பாக்டீரியா, வைரஸ் போ ன்ற நுண்கிருமிகளையும் நீக்குகின்றன.

யானை திப்பிலி, அரிசி திப்பிலி, வேப்பிலை, சுக்கு, சீந்தில் தண்டு, நிலவேம்பு, சுண்டை வற்றல் ஆகியவற்றை நன்கு உலர்த்தி, சுத்தம் செய்து, சம அளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, பின் ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

10 கிராம் பொடியை 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து 100 மிலியாக சுண்டியபின் வடிகட்டி, அதிகாலை வெறும் வயிற்றில் 7 நாட்கள் குடித்துவர, வயிற்றுப்புழுக்கள் வெளியேறும்.

புழுத்தொல்லையினால் ஏற்பட்ட தோல் தடிப்பு, வெள்ளை நிற மாவு படிதல், மலவாய் அரிப்பு, பலவிதமான வயிற்று உபாதைகள் நீங்க யானைத்திப்பிலியை இளவறுப்பாக வறுத்து, பொடித்து 1 கிராம் அளவு எடுத்து தேனுடன் குழப்பி, 3 முதல் 7 நாட்கள் சாப்பிட்டுவர வயிற்றுப்புழுக்கள் மலத்துடன் வெளியேறும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Back to top button
error: