சீன குடிமக்களுக்கு இந்திய சுற்றுலா விசா.. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா கிரீன் சிக்னல்..!
சீன குடிமக்களுக்கு சுற்றுலா விசா வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. விசா வழங்கும் நடைமுறை நாளை வியாழக்கிழமை முதல் தொடங்கும் என்று பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அதோடு இந்தியாவுக்கு வருகை தர சீன குடிமக்கள் விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுலா விசாக்கள் வழங்கப்படுவது இதுவே முதல் முறை. 2020 ஆம் ஆண்டில், கோவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தியா உலகளவில் சுற்றுலா விசாக்களை வழங்குவதை நிறுத்தியது.
பின்னர் பல்வேறு நாடுகள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும், சீனா மீதான தடை நீட்டிக்கப்பட்டது. கால்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்ததால் தடை அமலில் இருந்தது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் சமீபத்திய முன்னேற்றத்தைத் தொடர்ந்து சுற்றுலா விசாக்களை வழங்க இந்தியா தயாராக இருப்பதாகத் தெரிகிறது. வெளியுறவு அமைச்சர் சமீபத்தில் சீனாவுக்கு சுற்றுப்பயணம் செய்தார். இந்த சூழலில் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.