நீட் தேர்வு முடிவுகள்: ராஜஸ்தானைச் சேர்ந்த மகேஷ், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த உத்கர்ஷா முதலிடம்!

புதுடெல்லி: மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக தேசிய தேர்வு முகமை (NTA) நடத்திய தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் (NEET) முடிவுகள் இன்று சனிக்கிழமை அறிவிக்கப்பட்டன, இதில் ராஜஸ்தானைச் சேர்ந்த மகேஷ் குமார் முதலிடத்தையும், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த உத்கர்ஷா அவதியா இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.
இந்த ஆண்டு, 22.09 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர். இவர்களில் 12.36 லட்சம் பேர் தகுதி பெற்றனர். கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு முடிவுகள் குறைவாக உள்ளன. கடந்த ஆண்டு, 23.33 லட்சம் பேர் தேர்வெழுதினர். 13.15 லட்சம் பேர் தகுதி பெற்றனர்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த கிருஷாங் ஜோஷி மற்றும் டெல்லியைச் சேர்ந்த மிருணாள் கிஷோர் ஜா முறையே 3வது மற்றும் 4வது இடங்களைப் பெற்றனர்.
பெண்களில், டெல்லியைச் சேர்ந்த அவிகா அகர்வால் முதலிடம் பிடித்துள்ளார். அவர் தேசிய அளவில் 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.
நீட் தேர்வில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 1.70 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த 1.25 லட்சம் பேரும், ராஜஸ்தானைச் சேர்ந்த 1.19 லட்சம் பேரும் மருத்துவப் படிப்புகளுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
நாட்டில் மொத்தம் 1.08 லட்சம் மருத்துவ இடங்கள் உள்ளன. இவற்றில் 56,000 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 52,000 தனியார் கல்லூரிகளிலும் உள்ளன. இதனுடன், பல் மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்த மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும்.