அகமதாபாத் விமான விபத்து: 162 உடல்களின் டிஎன்ஏ அடையாளம் உறுதி!
குஜராத்தின் அகமதாபாத்தில் நடந்த பயங்கர ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 162 பேரின் டிஎன்ஏ மாதிரிகள், அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் பொருந்தி வருவதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தினர். இதுவரை 120 உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஜூன் 12 ஆம் தேதி, சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குச் சென்ற போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் அருகிலுள்ள மருத்துவ கல்லூரி விடுதி வளாகத்தில் மோதியது.
இந்த விபத்தில் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பயணிகள் மற்றும் பணியாளர்கள் உயிரிழந்தனர். விமானத்தில் இருந்த மொத்தம் 242 பேரில், விஸ்வாஸ் என்ற ஒரு பயணி மட்டுமே உயிர் பிழைத்தார்.
பிஜே மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த நான்கு மாணவர்களும் விபத்தில் இறந்தனர், மேலும் அந்த எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று அகமதாபாத் சிவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் ராகேஷ் ஜோஷி உறுதிப்படுத்தினார். உயிர் பிழைத்த விஸ்வாஸின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் மெதுவாக குணமடைந்து வருவதாகவும் ஜோஷி கூறினார்.
முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் இறுதிச் சடங்குகள் திங்கள்கிழமை ராஜ்கோட்டில் முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத் மற்றும் முதல்வர் பூபேந்திர படேல் போன்ற முக்கிய அரசியல்வாதிகள் முன்னிலையில் அவரது மகன் ருஷாப் ரூபானி இறுதிச் சடங்குகளைச் செய்தார். மீதமுள்ள உடல்களை அடையாளம் கண்டு குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Posted in: இந்தியா