பொழுதுபோக்கு

சுவையான வெஜ் சீஸ் ரோல் செய்யலாம் வாங்க!

வீட்டிலேயே மிகவும் சுலபமாக வெஜ் சீஸ் ரோல் செய்யலாம், எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

மைதா – ஒரு கப்
கோஸ் – 200 கிராம்
கேரட் – 200 கிராம்
குடைமிளகாய் – 200 கிராம்
மிளகுத் தூள் – கால் தேக்கரண்டி
கரமசாலா – அரை தேக்கரண்டி
சீஸ் துண்டுகள், உப்பு, எண்ணெய், தண்ணீர் தேவையான அளவு

செய்முறை:

முதலில் ரோல் செய்வதற்கான பேப்பர் போன்ற சப்பாத்தியை செய்ய வேண்டும். அதற்கு முதலில் மைதா மாவுடன் சிறிது எண்ணெய் ஊற்றி உப்பு தேவையான அளவு சேர்த்து கலந்து விட வேண்டும். பின்பு சிறிது சிறிதாக தண்ணீரை சேர்த்து பிசைந்துக் கொள்ள வேண்டும்.
பிசைந்த மாவின் மேல் திரும்பவும் எண்ணெய் ஒரு தேக்கரண்டி விட்டு தடவி அதன் மேல் ஒரு துணி கொண்டு மூடி அரை மணி நேரம் அப்படியே விட்டு விட வேண்டும்.

அடுத்து ரோல் உள்ளே வைப்பதற்காக காய்கறிகளை தயார் செய்ய வேண்டும். அதற்கு கோஸ், கேரட், குடைமிளகாய் போன்றவற்றை வால் வாலாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் விருப்பப்பட்டால் உருளைக்கிழங்கு அல்லது வெங்காயம் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரு கடாயில் எண்ணெய் இரண்டு தேக்கரண்டி விட்டு அதில் வெட்டிய காய்கறிகளை சேர்க்க வேண்டும். நன்றாக கிளறி விட்டு உப்பு, மிளகுத்தூள், கரமசாலா தூள் போன்றவற்றை சேர்த்து மீண்டும் நன்கு கிளறி விட்டு ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும்.

பின்பு பேப்பர் சப்பாத்தி செய்வதற்காக பிசைந்து வைத்த மாவினை எடுத்து உருண்டைகளாக உருட்டி அதை ஓரளவு மெலிதாக தேய்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒவ்வொரு சப்பாத்தியின் மேலும் சிறிது எண்ணெய் தடவி அதன்மேல் மைதா மாவினை தூவி விட வேண்டும். அனைத்து சப்பாத்திகளையும் ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து தவாவில் சிறிது எண்ணெய் விட்டு அடுக்கிய சப்பாத்திகளை அதில் மொத்தமாக வைக்க வேண்டும். பின்பு தோசைக் கரண்டியால் திருப்பி போட்டு ஒவ்வொரு சப்பாத்தியாக எடுத்தால் அழகான பேப்பர் ரோல் சப்பாத்தி வந்துவிடும். குறிப்பாக இரண்டு அல்லது மூன்று நொடிகளுக்கு மேல் வேக வைக்க கூடாது. சப்பாத்தி வெள்ளை நிறத்திலே இருக்க வேண்டும்.

அடுத்தாக ஒரு பேப்பர் ரோல் எடுத்து அதில், நாம் செய்து வைத்த காய்கறிகளை வைத்து அதன் மேல் நீள சீஸ் துண்டினை வைத்து உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். கடைசியில் ரோலை ஒட்டி முடிக்க மைதா மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து ஒட்டி எடுத்துக் கொள்ளலாம்.

அனைத்து ரோல்களையும் செய்த பிறகு மூன்று அல்லது நான்காக, கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொறித்து எடுத்தால் வெஜ் சீஸ் ரோல் தயார்.

குட்டி பிள்ளைகளுக்கு ஆரோக்கியமாக இப்படி வீட்டிலேயே காய்கறிகளை வைத்து சுவையாக செய்துக் கொடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− one = three

Back to top button
error: