
பிரபல AI நிறுவனமான OpenAI, இந்தியாவில் தனது முதல் அலுவலகத்தைத் திறக்க முடிவு செய்துள்ளது. ChatGPT-ஐப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருவதால், நாட்டின் தலைநகரான புது தில்லியில் இந்த அலுவலகம் அமைக்கப்பட உள்ளது.
எந்தப் பகுதியில் அலுவலகம் திறக்கப்படும் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. OpenAI-ன் இந்த நடவடிக்கை, இந்தியாவில் AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “முதல் அலுவலகத்தைத் திறப்பதும், புதிய ஊழியர்களை நியமிப்பதும், நாட்டில் AI-ஐ மேலும் அணுகக்கூடியதாக மாற்ற உதவும்” என்று தெரிவித்தார்.
அமெரிக்காவிற்குப் பிறகு, இந்தியா OpenAI-க்கு இரண்டாவது பெரிய சந்தையாக உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டில் ChatGPT-ஐப் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.