பூஜை அறையில் சனிபகவான் படத்தை வைத்து வழிபடலாமா?

By Web Admin |
Advertisement

பூஜை அறையில் சனிபகவான் படத்தை வைத்து வழிபட கூடாது என்பதைவிட அவசியமில்லை என்பதே நிஜம். சனி உட்பட நவகிரஹங்களை கடவுளாக வழிபடுவது என்பது பழங்காலத்தில் இல்லை. பழங்கால ஆலயங்களில்கூட சமீபத்தில்தான் நவகிரஹங்களை பிரதிஷ்டை செய்திருப்பார்கள்.

அதிகபட்சமாக இருநூறு ஆண்டுகளாகத்தான் நவகிரஹங்களுக்கான உருவ வழிபாடு என்பது ஆலயங்களில் நடந்து வருகிறது. இறைவன் இட்ட பணியைச் செய்யும் பணியாளர்களே நவகிரஹங்கள். நவகிரஹங்களால் உண்டாகும் சிரமத்தினைக் குறைக்க இறைவனிடம்தான் முறையிட வேண்டுமே தவிர கிரஹங்களிடம் அல்ல.

இருந்தாலும் பொதுமக்களின் நலன் கருதி ஆகம விதிகளுக்கு உட்பட்டு சிவாச்சாரியார்கள் நவகிரஹங்களை பிரதிஷ்டை செய்து அவர்களையும் வலம் வந்து வழிபடுவதில் தவறில்லை என்ற எண்ணத்தோடு அதற்கான விதிமுறைகளையும் வகுத்துத் தந்திருக்கிறார்கள். அதேநேரத்தில் நவகிரஹங்களால் கடுமையான தோஷம் உண்டாகும்போது அதற்குரிய சாந்தி பரிகாரங்களை ‘சாந்தி குஸூமாகரம், சாந்தி ரத்னாகரம்’ போன்ற நூல்களில் வேத மந்திரங்களின் துணைகொண்டு ஜபம், ஹோமம், அர்க்யம் என்ற விதிகளின்படி செய்துகொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

Advertisement

சனிபகவான், அசுப கிரஹங்களில் முதன்மையானவராகக் கருதப்படுவதால் அவருடைய உருவப்படத்தையோ அல்லது விக்கிரகத்தையோ வீட்டில் வைத்து வழிபடுவது அவசியமில்லாத ஒன்று. வேலியில் போன ஓணானைப் பிடித்து வேட்டியில் விட்டுக்கொண்ட கதை ஆகிவிடும். சனி மட்டுமல்ல, சுபகிரஹமாகிய குரு உட்பட நவகிரஹங்களுக்கு உரிய உருவ வழிபாட்டினை ஆலயத்தில் மட்டுமே வைத்துச் செய்வது நன்மை தரும். வீட்டில் வைத்து வழிபட நினைப்பவர்கள் ஹோமம் செய்தோ அல்லது தீபத்தை ஏற்றி வைத்து அந்த தீப ஜோதியில் கிரஹங்களை ஆவாஹணம் செய்தோ வழிபடலாம். மற்றபடி கிரஹங்களுக்கு உரிய உருவ வழிபாட்டினை வீட்டில் செய்வது தேவையற்ற ஒன்று.

Advertisement

Your reaction to this article:

Share:
Daily Tamilnadu on Google News

Get the latest news by adding us as a preferred source on Google News.

Add as Preferred Source
Advertisement