கார் விபத்தில் தெலுங்கானா எம்.எல்.ஏ மரணம்!

 

தெலங்கானா மாநிலத்தில் செகந்திராபாத் கன்டோன்மென்ட் எம்எல்ஏ லாஸ்யா நந்திதா (37) இன்று அதிகாலை 5 மணியளவில், தனது உதவியாளர் அசோக்குடன் மெட்சல் பகுதியில் இருந்து சதாசிவ பேட்டா நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நந்திதா, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் நந்திதா வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கார் ஓட்டிய உதவியாளர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கார் சுமார் 130 முதல் 150 கி.மீ வேகத்தில் அலட்சியமாக ஓட்டியதும், கார் சீட் பெல்ட்டை எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா அணியாததும் அவர் மரணத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. கார் விபத்தில் தெலுங்கானா எம்.எல்.ஏ. உயிரிழந்த சம்பவம் மாநில அரசியலில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 10 நாள்களுக்கு முன்பு, நார்கட்பள்ளியில் நடந்த மற்றொரு சாலை விபத்தில் லாஸ்யா உயிர் தப்பினார். அந்த விபத்தில் அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. கடந்த 13-ம் தேதி அன்று, முதலமைச்சரின் பேரணியில் கலந்து கொள்வதற்காக லாஸ்யா நந்திதா நல்கொண்டா சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில் அவரது பாதுகாவலர் உயிரிழந்தார்.

 
 
 
Exit mobile version