வழவழப்பில்லாத சேனைக் கிழங்கு மசாலா செய்வது எப்படி?

 

சேனைக்கிழங்கில் உள்ள வழவழப்பு தன்மையால் பலர் அந்த காயை அவ்வளவாக விரும்பி சாப்பிடமாட்டார்கள். நாம் உருளைக்கிழங்கை போல மிருதுவான வறுவலாக செய்தால் குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பி சாப்பிடுவர். இதை ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட ருசி கூடும்.

தேவையான பொருட்கள்:

 

சேனைக்கிழங்கு – 1/2 கிலோ

வெங்காயம் சிறிது – 2

 

தக்காளி – 1

பூண்டு – 5பல்

 

இஞ்சி – 1/2 இன்ச்

கறிவேப்பிலை – சிறிதளவு

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்

கொத்தமல்லி – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

கடுகு – 1ஸ்பூன்

உ.பருப்பு – 1டீஸ்பூன்

க.பருப்பு – 1டீஸ்பூன்

பெருங்காயம் – சிட்டிகை

ரவை – 1ஸ்பூன்

செய்முறை:

சேனைக்கிழங்கை குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை தட்டி நசுக்கி கொள்ளவும்.

வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும் உ.பருப்பு, க.பருப்பு கறிவேப்பில்லை போட்டு லேசாக வறுபட்டதும், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தட்டிய இஞ்சி பூண்டை சேர்த்து வதங்கியதும், தக்காளியை வதக்கவும்.

நன்றாக வதங்கிய பின் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து, 5 நிமிடம் மசாலா நன்றாக வதங்கியதும், வேகவைத்த கிழங்கினை வாணலில் சேர்க்கவும். மசாலாவுடன் கிழங்கை நன்றாக கலந்து விடவும்.

கிழங்கில் உள்ள வழவழப்பு தன்மை போக்க கடைசியாக ஒரு ஸ்பூன் ரவையை சேர்த்து 2 நிமிடம் வறுத்தால் மொருவளாகவும், ஒன்றோடு ஒன்று ஒட்டாமலும் இருக்கும். சேனைக்கிழங்கு மசாலாவை இப்படி செய்தால் ருசியும் கூடும், தட்டும் காலியாகும்.

 
Exit mobile version