சுவை அள்ளும் மாங்காய் சாதம் செய்முறை!

 

தேவையான பொருட்கள்:

மாங்காய்- 1
வடித்த சோறு- 1 கப்
காய்ந்த மிளகாய்- 3
வெங்காயம்- 1
பூண்டு- 4 பற்கள்
கடுகு- கால் தேக்கரண்டி
கடலைப் பருப்பு- கால் தேக்கரண்டி
வெள்ளை உளுந்து- கால் தேக்கரண்டி
கருவேப்பிலை- ஒரு இணுக்கு
மஞ்சள் தூள்- கால் தேக்கரண்டி
எண்ணெய், உப்பு, தண்ணீர்- தேவையான அளவு

 

செய்முறை:

குட்டி அளவிலான ஒரு மாங்காயை எடுத்து கேரட் துருவது போல் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். காய்ந்த மிளகாயை சிறிது சிறிதாக கிள்ளி எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை வால் வாலாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

பின்பு ஒரு காடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். பிறகு அதில், கடுகு, கடலைப் பருப்பு, வெள்ளை உளுந்து உள்ளிட்டவற்றை சேர்க்க வேண்டும்.

கடுகு பொரிந்ததும் அதில் வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை சேர்த்துக் கொள்ளலாம். பிறகு கருவேப்பிலை ஒரு இணுக்கு எடுத்து, உருவி சேர்க்க வேண்டும். வெங்காயம் வந்தங்கியவுடன் அதில் மஞ்சள் தூள் சேர்த்து துருவிய மாங்காயையும் சேர்க்க வேண்டும்.

 

பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அடி பிடிப்பது போல் இருந்தால் சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளலாம். மாங்காயை 5-7 நிமிடங்கள் வரை வதக்கி இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு பளப்பளப்பாக வடித்த சோறுடன் நாம் வதக்கிய மாங்காயை சேர்த்து கிளற வேண்டும். தேவைப்பட்டால் உப்பு சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

புளிப்பு அதிகம் விரும்பாதவர்கள் மிளகாயை ஒன்று அல்லது இரண்டை கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம்.

அவ்வளவு தான், சுவையான மாங்காய் சாதம் தயார். மாங்காய் சாதத்துடன் காரமான ஏதேனும் வறுத்த பதார்த்தம் சிறந்த இணை…

இதனை செய்து சாப்பிட்டு பாருங்கள் சுவை அள்ளும்!

 
Exit mobile version