
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) உத்தரவின்படி முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை தங்கள் பயனர்களுக்கு புதிய ரீசார்ஜ் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளன. இவை அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகளுக்காக மட்டுமே கொண்டு வரப்படுகின்றன. இப்போது பயனர்கள் டேட்டா தேவையில்லாத போது கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இது அதிக எண்ணிக்கையிலான பயனர்களுக்கு பயனளிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
TRAI உத்தரவுகளைத் தொடர்ந்து, ஜியோ மற்றும் ஏர்டெல் இந்த அழைப்பு மட்டும் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி பலன்களை மட்டுமே வழங்கும் இந்தத் திட்டங்கள் இப்போது இரு நிறுவனங்களின் இணையதளங்களிலும் பயனர்களுக்குக் கிடைக்கும்.
டிசம்பர் 23, 2024க்குள் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்த TRAI உத்தரவிட்டுள்ளது. டேட்டா தேவையில்லாதவர்களுக்கு இதுபோன்ற திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும். இது ஃபீச்சர் போன் பயனர்களுக்கும், இரட்டை சிம் பயன்படுத்துபவர்களுக்கும் பயனளிக்கும் என்று கூறப்படுகிறது.
ரூ. 458, ரூ. 1,958 உடன் ஜியோ திட்டங்கள்
TRAI உத்தரவை தொடர்ந்து ஜியோ வாய்ஸ் ஒன்லி என்ற பெயரில் இரண்டு ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதுதான் ரூ.458, ரூ.1,958 திட்டம். ரூ.458 திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும். இது இலவச வரம்பற்ற உள்நாட்டு அழைப்பு மற்றும் 1,000 இலவச எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. ஜியோ சினிமா மற்றும் ஜியோ டிவி பயன்பாடுகளுக்கான அணுகல் கிடைக்கும். இதில் மொபைல் டேட்டா இல்லை. அதேபோல், ரூ.1,958 திட்டம் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும். இது இலவச வரம்பற்ற அழைப்பு மற்றும் 3,600 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. இதிலும் மொபைல் டேட்டா கொடுக்கப்படவில்லை.
ஏர்டெல்லின் திட்டங்கள் இவைதான்
ஜியோவைப் போலவே ஏர்டெல் நிறுவனமும் இரண்டு வாய்ஸ் ஒன்லி பிளான்களை கொண்டு வந்துள்ளது. நிறுவனம் ரூ.509 திட்டம் வரம்பற்ற அழைப்பு மற்றும் 900 குறுஞ்செய்திகளை 84 நாட்களுக்கு வழங்குகிறது. மேலும் ரூ.1,999 திட்டம், பயனர்கள் வரம்பற்ற அழைப்பு மற்றும் 3,600 எஸ்எம்எஸ்கள் ஒரு வருட செல்லுபடியாகும்.