அள்ளிக் கொடுக்கும் சுக்கிரனுக்குரிய வெள்ளிக்கிழமையன்று, துள்ளித்திரியும் சிங்கத்தின் மேலே ஏறி பவனி வரும் தூயவளாம் அம்பிகையை வழிபட்டால், நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். கிழமைகளில் சுக்ரவாரம் என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமை. ஆடி மாத வெள்ளிக்கிழமைகள் சிறப்புப்பெறுகின்றன. ஆடி வெள்ளியன்று லஷ்மியை வழிபட்டால் செல்வச்செழிப்பு உண்டாகும்.
மனிதனின் வாழ்க்கைக்குத் தேவை அருளோடு வரும் பொருள் வளம் கொடுப்பவளான திருமகள் அஷ்ட லக்ஷ்மிகளாக வணங்கப்படுகிறாள்.
விஷ்ணு பகவான் தான் எங்கும் நிறைந்துள்ளதை விளக்க, உலகிலுள்ள அழகுகள் அனைத்தையும் ஒன்றாக்கி அமைத்துள்ள அடையாளமே மகாலக்ஷ்மி.
ஆடி வெள்ளி அன்று வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்து விளக்கேற்றி, நிவேதனமாக பால்பாயசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் வைத்து, லலிதா சகஸ்ரநாமம், அம்மன் பாடல்களைப் பாடி பூஜை செய்தால் நல்ல பலன் கிட்டும். அன்று சிறு பெண் குழந்தைகளை அம்மனாகப் பாவித்து அமுதளித்து. ரவிக்கை, தாம்பூலம், சீப்பு, சிமிழ், கண்ணாடி வளையல் தந்து சிறப்பிக்க வேண்டும்.
குத்துவிளக்கை லக்ஷ்மியாக பாவித்து அலங்கரித்து பொன் ஆபரணங்கள் -வீட்டில் உள்ள நகைகளை அணிவித்து, மரப்பலகையில் மஞ்சளால் கோலமிட்டு அதன் மேல் பட்டுத் துணி விரித்து அதில் பச்சரிசியை சிறிதளவு தூவி அதில் அலங்கரித்த குத்து விளக்கை -மஹாலஷ்மியாக ஆவாஹனம் செய்து அமரச் செய்து மன நிறைவுடன் பூஜித்து அருள் பெறலாம்.
ஒவ்வொரு ஆடி மாதமும், ஆடிவெள்ளியன்று – முதல் வெள்ளி அல்லது ஆடி மாதத்தின் ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகணம் செய்து வழிபடுவது சிறப்பு.
ஆடி வெள்ளியன்று மகாலக்ஷ்மியை வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை.
ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த
வரலட்சுமி விரதம் இருந்து வழிபடுகிறோம்.