தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற மாதம் ஆடி மாதம். அம்மனுக்கு உரிய மாதமாக இது போற்றப்படுகிறது. பூமாதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம் இது. பார்வதியின் தவத்தில் மகிழ்ந்த பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். அதனால்தான் சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும்.
ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகிவிடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிக்கிழமைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
ஆடி செவ்வாய் தேடிக் குளி என்பது பழமொழி. அதாவது ஆடிமாத செவ்வாய்க்கிழமையன்று விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்பாளை வழிபட பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை. ஆடி வெள்ளி வழிபாடு செய்வதால் திருமண பாக்கியம் கைகூடும், நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் எதிர்பார்த்திருப்போருக்கும் நல்ல அறிவாற்றல், புத்திக்கூர்மையுடன் கூடிய குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.
ஆடி மாதத்தில் பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபடுதல் என்று இந்த மாதம் முழுவதும் வழிபாட்டு மாதமாகிறது. ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தவிர ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு, ஆடிப்பௌர்ணமி, ஆடிப்பெருக்கு, வரலட்சுமி விரதம் என்று பலப்பல விசேஷ நாட்கள் இந்த மாதத்தில் வருகின்றன. இத்தகைய விசேஷ நாட்களில் விரதமிருந்து அம்மனை வழிபடுவது மிகவும் சிறந்தது.
ஆடி மாதம் அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?
தவத்தில் சிறந்து விளங்கிய ஜமத்கனி முனிவரை பொறாமை காரணமாக கார்த்த வீரியார்சுனனின் மகன்கள் கொன்று விடுகின்றனர். இதை கேள்விப்பட்டு துக்கம் தாங்க முடியாமல் ஐமத்கனி முனிவரின் மனைவி ரேணுகாதேவி உயிரை விட முடிவு செய்து தீயை மூட்டி அதில் இறங்குகிறார்.
அப்போது இந்திரன் மழையாக மாறி தீயை அணைத்தார். தீக்காயங்களால் ரேணுகாதேவியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டன. வெற்றுடலை மறைக்க அருகில் இருந்த வேப்பமர இலைகளை பறித்து ஆடையாக அணிந்தார்.
ரேணுகாதேவிக்கு பசி ஏற்பட்டதால் அருகில் உள்ள கிராம மக்களிடம் சென்று உணவு கேட்டார். அப்போது மக்கள் அவருக்கு பச்சரிசி, வெல்லம், இளநீரை உணவாக கொடுத்தனர். இதைக்கொண்டு ரேணுகாதேவி கூழ் தயாரித்து உணவருந்தினார்.
அப்போது சிவபெருமான் தோன்றி ரேணுகாதேவியிடம், உலக மக்களின் அம்மை நோய் நீங்க நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும். நீ உண்ட கூழ் சிறந்த உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரமாகும் என்று வரம் அளித்தார்.
இச்சம்பவத்தை நினைவு கூறும் வகையில் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் வார்க்கும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும், ஆடி மாதம் வீசக்கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அதனால் எங்கும் தூசியாக இருக்கும். இதனால் காய்ச்சல், இருமல் போன்ற நோய்கள் வரலாம். இதை தவிர்க்கவே மாரியம்மன் கோவில்களில் ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றுவார்கள். இதை ஆடிக்கஞ்சி என்பர்.