சிவராத்திரி நாளில் கண் விழிப்பது ஏன்?

 

சிவனுக்குரிய விரதங்களிலேயே முதன்மை விரதம் என்றால் அது மகா சிவராத்திரி தான். சிவனின் அருளைப் பெற அதுவும் முக்தியை தரக்கூடிய வல்லமை வாய்ந்த மிகச் சிறப்பு வாய்ந்த நாளாக கொண்டாடப்படுவது தான் மகா சிவராத்திரி.

மகா சிவராத்திரி தினத்தில் நான்கு கால பூஜைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறும். இதில் பங்கேற்று இறைவனை வழிபட வேண்டும்.

 

சிவராத்திரி அன்று கண் விழித்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். தியானம் நிலைக்கும். நினைத்த காரியம் நடக்கும்.

சிவராத்திரி நாளில் ஏன் கண் விழித்திருக்க வேண்டும்? என்கிற சந்தேகம் அனைவருக்கும் வரலாம். ஏன் இப்படி ஒரு வழக்கத்தை நீண்ட நாட்களாக மக்கள் பின்பற்றி வருகின்றனர்? என்று நம் மனதில் பல கேள்விகள் எழும்.

சிவராத்திரி விரதம் மொத்தம் ஐந்து வகைப்படும். நித்ய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி மற்றும் மகா சிவராத்திரி. சிவராத்திரியன்று விரதம் இருந்தால் நாம் தெரிந்தோ அல்லது தெரியாமல் செய்த அனைத்து பாவங்களும் நம்மை விட்டு நீங்கிப் போகும்.

 

ஏன் கண் விழிக்க வேண்டும்?

நம்முடைய வாழ்க்கையில் நாம் நினைத்ததை சாதிக்க நம்முடைய உடலில் சக்தியும், ஆன்ம பலமும் மற்றும் மன உறுதியும் தான் மிக அவசியம்.

அதை உந்துவிப்பதே இறைவனின் அருள் என்று ஆன்மிகப் பெரியோர்கள் குறிப்பிடுவார்கள். அப்படி சிவனின் உந்துதலை பெறுவதற்கான சரியான நாள் தான் இந்த மாசி மகாசிவராத்திரி.

 

அன்றைய தினம் இரவு முழுவதும் தூங்காமல் கண்விழித்து அமர்ந்து நம்முடைய முதுகுத்தண்டுப் பகுதியை ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்படி நேராக வைத்திருப்பதால் நம்முடைய உடல் மற்றும் மனதின் சக்தி நிலைகளானது உயர ஆரம்பிக்கும்.

இந்த சக்திப் பெருக்கத்தின் வழியாக உங்களால் மகிழ்ச்சியான வாழ்க்கையையும், முக்தியையும் அடைய முடியும்.

நம்முடைய உடலின் சக்தி ஆற்றலை பலமடங்கு பெருக்குவதற்காகத் தான் முதுகுத்தண்டை நேராக வைத்து நிமிர்ந்து உட்கார்ந்து இரவு விழித்திருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது.

 
Exit mobile version