சபரிமலைக்கு முதல் முறையாக மாலை அணிந்தவரா?
மாலை அணிந்து சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்தால் கஷ்டங்கள் நீங்கி வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.
சபரிமலைக்கு முதல்முறையாக செல்லும் பக்தர்கள் அதாவது, கன்னி சாமிகள் செய்ய வேண்டிய பூஜை முறைகள் என்ன? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
கன்னி சாமிகள் சபரிமலை செல்வதற்கு முன் படுக்கை பூஜை அல்லது வெள்ளம் குடி பூஜையை கட்டாயம் நடத்த வேண்டும்.
பூஜை செய்யும் முறை
வீட்டின் கிழக்கு பாகத்தில் ஏழு கோல் சதுரத்தில் பந்தல் அமைத்து, பந்தலை அலங்கரித்து, நடுவில் அலங்கார மண்டபம் அமைக்க வேண்டும்.
மண்டபத்தில், ஐயப்பன் படம் அல்லது சிலையை அமைக்க வேண்டும். மேலும் கணபதி, மாளிகைப்புரத்தம்மன், கருப்பசாமி, கடுத்தசுவாமி, வாபர்சுவாமி மற்றும் ஆழி ஆகியவற்றை அமைக்க உரிய இடங்களை தேர்வு செய்ய வேண்டும்.
இந்த இடங்களில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து சாமிகளுக்கு முன் அவல், பொரி, பழம் ஆகியவற்றை படைக்க வேண்டும்.
நடுப்பாகத்தில் ஐயப்பனை ஒரு பீடத்தின் மீது வைத்து பட்டு விரித்து அதன் முன்னால் இலை போட்டு நெல்லும், அரிசியும் நிரப்பி வைக்க வேண்டும். கிழக்கு திசையை நோக்கி தேங்காயை வைக்க வேண்டும்.
அலங்கார மண்டபத்தின் கிழக்கு பாகத்தில் ஆழி அமைப்பதற்கு இடம் ஒதுக்க வேண்டும். அதில் விறகுகளை அடுக்கி ஆழி வளர்க்க வேண்டும். பூவரசு அல்லது பல விறகுகளை ஆழியில் போட வேண்டும்.
ஐயப்பனுக்கு தீபாராதனை நடத்திய பிறகு ஆழியை ஏற்ற வேண்டும். அனைத்து ஐயப்பன்மார்களும் ஆழியை வலம் வர வேண்டும். பூஜை முடிந்த பிறகு அனைத்து பக்தர்களுக்கும் உணவு வழங்க வேண்டும். இதுதான் முறையான ஐயப்ப பூஜை ஆகும். கூட்டாகவும் இந்த பூஜையை நடத்தலாம்.
விரத காலத்தில் செய்ய வேண்டியவை
எளிமை, சுகாதாரம், புனித எண்ணங்கள் ஏற்படுதல் ஆகியவையே ஐயப்பன் விரதத்தில் முக்கியமானவை. உடலும், மனமும் சுத்தமாக இருக்க வேண்டும். ஐயப்பனை கற்பூர தீபப்பிரியன் என்பர். எனவே தினமும் காலையும், மாலையும் கற்பூர தீபம் காண்பிக்க வேண்டும்.
ஐயப்பனை அன்னதான பிரபு என்று அழைப்பார்கள். எனவே கன்னி சாமிகள் அன்னதானம் செய்வது மிகவும் நல்லது. முடிந்தவரை கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு பொருள் அல்லது உடல் உழைப்பால் உதவி செய்ய வேண்டும்.
Posted in: ஆன்மீகம்