குல தெய்வ வழிபாடு என்பது நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே தொன்று தொட்டு இருந்து வருவதாகும். எந்த ஒரு நல்ல செயலை செய்ய தொடங்கும் போதும் முதலில் குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்து விட்டு தொடங்குவது மிகவும் சிறந்த ஒன்றாகும்.
நம் வீட்டில் நடக்கும் காது குத்து, கல்யாணம், வளைகாப்பு, வீட்டு கிரகப்ரவேசம், புதிய தொழில் தொடங்குதல் என அனைத்திற்கும் குல தெய்வத்தை வழிபட்டு பின்னர் செய்ய தொடங்குவது நன்மையை தரும்.
குல தெய்வத்தை வழிபடுவதால் தீராத நோய்கள் தீரும், கடன் பிரச்சனை தீர்ந்து விடும். குழந்தை வரம் கிடைக்கும். குடும்ப ஒற்றுமை மேன்மை பெரும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் விலகும். குடும்ப வாழ்க்கை சுபிக்க்ஷமாக அமையும். கணவன், மனைவி இருவருக்கிடையே புரிதல் ஏற்பட்டு குடும்பத்தில் அமைதியும், சந்தோஷமும் நிறைந்திருக்கும்.
குல தெய்வத்தை யார் ஒருவர் விடாமல் தொடர்ந்து வழிபாடு செய்கிறார்களோ, அவர்கள் வேண்டும் வரம் எல்லாம் கிடைக்கும் என்பது முன்னோர்கள் நம்பிக்கை.
நம் வேண்டுதலை ஏற்று நிறைவேற்றும் குல தெய்வத்திற்கு காணிக்கையாக மொட்டை போடுதல், தீ மிதித்தல், தீச்சட்டி எடுத்தல், தொட்டில் கட்டுதல், பொங்கலிடுதல் போன்றவை குல தெய்வங்களுக்காக நடத்தப்படுகின்றன. சிலர் குலதெய்வதை ஆண்டுக்கு ஒரு முறையே வழிபடுகின்றனர். அது தவறாகும் குல தெய்வத்தை அடிக்கடி வழிபட வேண்டும்.
அப்படி அடிக்கடி வழிபட முடியாதவர்கள் வாரம் தோறும் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் வீட்டில் சாமி கும்பிடும் போது ஒரு கலசத்தில் நிறைய தண்ணீர் வைத்து அதில் மாவிலை, வேப்பிலை, மஞ்சள் போட்டு கலசத்திற்கு மஞ்சள், குங்குமம் வைத்து கலசத்திற்கு பூ வைத்து அதை குல தெய்வமாக நினைத்து வழிபட வேண்டும். இவ்வாறு செய்வது நம் குல தெய்வத்தை வழிபடுவதற்கு சமமாகும்.
தொடர்ந்து எவர் ஒருவர் வீட்டில் அசுப நிகழ்ச்சிகள் நடந்தாலோ அல்லது தீமைகள் ஏற்பட்டாலோ குலதெய்வம் கடும் கோபத்தில் இருப்பதாக கருதுவது வழக்கம்.
இது போன்று நிகழ்ச்சிகள் நடந்த வீட்டில் ஒரு வருடத்திற்கு பிறகு கண்டிப்பாக குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும். அப்போது தான் குல தெய்வத்தின் அருள் கிடைத்து வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
எனவே குலதெய்வத்தை மறந்து விடாமல் வழிபட்டு குலதெய்வத்தின் அருளை பெற்று வாழ்வில் எல்லா செல்வங்களையும் பெற வேண்டும்.