ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் விழாக்களும், கொண்டாட்டங்களும் களை கட்டியிருக்கும். அதே ஆடி மாதம் பெருமாள் கோவில்களில் சூடித்தந்த சுடர்க்கொடியான ஆண்டாளுக்கு சிறப்பு வழிபாடுகளும், தேரோட்டமும் நடைபெறுவதும் வழக்கம்.
மாதந்தோறும் பூரம் நட்சத்திரம் வந்தாலும், ஆடியில் வரும் பூரம் ஆண்டாளின் அவதாரத்தினால் விசேஷமாகிறது. விஷ்ணு பக்தையாக வாழ்ந்து, சகலமும் அவனே என அவனுடன் ஐக்கியமானவர். ஆழ்வார்கள் வரிசையை அலங்கரித்து பெண் இனத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவர் ஆண்டாள்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி ஆடிப்பூரம் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. அற்புதமான ஆடிப்பூரம் நாளில் விரதம் இருந்து ஆண்டாளை வேண்டிக்கொண்டால் மனம் போல மாங்கல்யம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அம்மன் கோவிலுக்கு வளையல் வாங்கிக் கொடுக்க புத்திர பாக்கியம் கிடைக்கும்.
ஆண்டாள் அவதரித்த நாள்
பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது போல, நம்மைப் படைத்த அன்னைக்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ந்திடும் நாளே ஆடிப்பூரம். அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளைகாப்பு நடக்கும் நாள்தான் ஆடிப்பூரம்.
அன்னை உள்ளம் மகிழ்ந்து மாந்தர்கள் அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள் திருவாடிப்பூரம். ஆடிப்பூரம் அன்று பூமி தாயினை வழிபட்டு அவளின் அருளை பரிபூரணமாக பெறுவோம்.
எல்லா கோவில்களிலும் அம்பாளுக்கு வளையல் சாற்றுவார்கள், பக்தர்கள் காணிக்கையாக தரும் வளையல்களை அம்மனுக்கு சாற்றிவிட்டு பின்னர் அதை மங்கள பிரசாதமாக தருவார்கள். இதை அணிந்துக்கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
அம்மனுக்கு படைத்த வளையலை கர்ப்பிணிகள் கைகளில் அணிந்துக்கொண்டால், சுகப்பிரசவம் நிகழும்.
ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பணம் வைத்து கொடுப்பது நல்லது.
ஆடிப்பூரத்தன்று மஞ்சள் தாலி கட்டிக்கொள்ள தீர்க்க சுமங்கலியாய் இருப்பார்கள்.
ஆடிப்பூரம் அன்று சக்தி ஸ்தலங்களில் அம்மன் ஆலயங்களில் வழிபட, கேட்கும் வரம் கிடைக்கும். ஆரோக்கியம், செல்வ செழிப்பு உண்டாகும்.
சகல நலங்களையும், வளங்களையும், நீங்காத செல்வத்தையும் பெற ஆண்டாள் பாதம் பணிவோம்.