நாம் வாழ்வதற்கு சுவாச காற்று எப்படி முக்கியமோ அதுபோல் குலம் தழைக்க குலதெய்வம் மிக முக்கியம். கிராமங்களில் மட்டுமல்லாமல் பெரிய நகரங்களில் வாழும் மக்களும் இன்றுவரை அவரவர் குலதெய்வத்தை வணங்கிய பிறகே மற்ற தெய்வங்களை வணங்கும் வழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். வெளி நாட்டில் வாழ்ந்தாலும் வருடத்திற்கு ஒருமுறையாவது தங்களின் சொந்த ஊருக்கு திரும்பி வந்து அவரவரின் குலதெய்வத்தை வணங்குவார்கள்.
குழந்தைக்கு காது குத்துவது, முடிகாணிக்கை போன்ற தங்கள் வீட்டு முதல் விசேஷங்களை குலதெய்வ கோவிலில்தான் நிறைவேற்றுவார்கள். நம் இஷ்ட தெய்வம் என்னதான் சக்தி வாய்ந்த தெய்வமாக இருந்தாலும், முதலில் குலதெய்வத்தையே வணங்க வேண்டும். காரணம், எப்படி நாம் ஒரு வீட்டுக்குள் செல்வதற்கு முன் அந்த வீட்டில் இருப்பவர்களின் அனுமதியை பெற்ற பிறகு நுழைகிறோமோ அதுபோல், மற்ற தெய்வங்கள் தன் பக்தர்களுக்கு உதவும் முன் குலதெய்வத்தின் அனுமதியை கேட்பார்கள். ஒரு வேலை அந்த குடும்பத்திற்கு குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்நத ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.
குலதெய்வத்தின் ஆசி இல்லையென்றால் முன்னேற்றத்தில் பல தடைகள் ஏற்படுகிறது. துன்பகரமான சம்பவங்கள் நடக்கிறது. திருமணதடை, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது, நிரந்தர வேலை இல்லாமல் இருப்பது, குடும்பத்தில் பிரச்சனை, உடல் உபாதைகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. நமது இந்து சமுதாயத்தில் ஒரு சுப செயலை துவங்குவதற்கு முன்னதாக விநாயகப் பெருமானை வணங்கிய பிறகே புதிய முயற்சிகளை தொடங்க வேண்டும் என்பது கட்டாய விதி. அதுபோல குலதெயவத்தையும் வணங்கி வருடத்திற்கு ஒருமுறையாவது குலதெய்வ கோயிலில் பொங்கல் படைத்து வணங்கினால், அந்த பொங்கல் பொங்குவது போல வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.
தடைகள் விலக பரிகாரம் எடுக்கும் முயற்சியில் தடை ஏற்பட்டுக்கொண்டே இருந்தால், அந்த தடைகள் விலக குலதெய்வத்தை நினைத்து ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் துணியில் முடித்து வைத்து, மனதால் குலதெய்வத்தை பிராத்தனை செய்தால், தடை விலகி விரைவில் நல்ல பலனை காணலாம். அதுபோல உடல் உபாதைகள் இருந்தால் அந்த உடல் உபாதைகள் விலக, மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் நாணயத்தை கட்டி குலதெய்வத்தை மனதால் பூஜித்து உடல் உபாதைகளால் அவதிப்படுபவர்களின் வலது கையில் கட்டினால், குலதெய்வத்தின் சக்தியால் உடல் உபாதைகள் பெரிய பிரச்னையில்லாமல் விரைவில் உடல் நலம் பெறுவார்கள்.
குலதெய்வம் எது என்று எப்படி தெரிந்துக்கொள்வது? ஒருவேலை தமது குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் எப்படி தங்களின் தெய்வத்தை தெரிந்துக்கொள்வது என்றால், வெள்ளிகிழமையிலும், செவ்வாய் கிழமையிலும் நம் வீட்டின் தலைவாசல் காலிலும், வீட்டின் பூஜை அறையிலும் மஞ்சள் குங்குமத்தை அவரவர் குலவழக்கத்தின்படி வைத்து வணங்கி, வாசனை மலர்களை தூவி கற்பூர தீபஆராதனை காட்டி, “எங்கள் குலதெய்வமே நீ இருக்கும் இடம் எங்களுக்கு தெரியவேண்டும். உன்னை நாங்கள் அறிய வேண்டும். எங்களுக்கு உன் அருள் வேண்டும். நம் குலத்தை காக்க வா.” என்று மனதால் வேண்டினாலே நிச்சயம் ஒருநாள் உங்கள் குலதெய்வத்தை பற்றிய விபரம் யார் மூலமாவது தெரிந்துக்கொள்வீர்கள். இது பலரின் அனுபவத்தில் கண்ட உண்மை.
பொதுவாக யாரை பற்றி அதிகம் நினைக்கிறோமோ அவர்கள் நம்மை ஒருநாள் தேடி வருவார்கள். டெலிபதி என்று கூறுவார்களே… அந்த டெலிபதி மனிதர்களுக்கு மட்டும் அல்ல தெய்வ செயலுக்கும் இது பொருந்தும். தலைவாசல் காலிலும், பூஜை அறையிலும்தான் தன் குல மக்களை காக்க குலதெய்வம் வாசம் செய்கிறது. அதனால்தான் நம் முன்னோர்கள் வாசல்படியிலும், வீட்டின் பூஜை அறையிலும் அவரவர் குலவழக்கத்தின்படி மஞ்சள் – குங்கமம் வைத்து தீபாரதனை செய்ய வேண்டும் என்று ஒரு விதியாக சொல்லி வைத்தார்கள். குலதெய்வத்தை வணங்குங்கள். உங்கள் வம்சத்தை காக்க முதலில் ஒடி வரும் தெய்வமே, குலதெய்வம்தான்.