ஆன்மீகம்

சந்திர பகவானால் உண்டாகும் யோகங்கள்!

நவக்கிரகங்களில் சூரியனுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருப்பவர் சந்திர பகவானாவார். சந்திர பகவான் வளர்பிறை காலத்தில் சுபராகவும், தேய்பிறை காலத்தில் பாபராகவும் இருக்கிறார். சந்திர பகவான் சுப கிரகங்களுக்கு நட்பு கிரகமாக இருப்பதால், ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையில் இருக்கும் பட்சத்தில் பல நன்மைகள் உண்டாகும். சந்திரன் அழகிற்கு உரியவர். ஒருவர் ஜாதகத்தில் சந்திரனைக் கொண்டு தான் தாய் வழி உறவுகள், ஜாதகரின் தோற்றம் போன்றவை நிர்ணயிக்கப்படுகிறது.

சந்திரனுக்கு “மதி” என்ற பெயர் உண்டு. இதற்கு காரணம் சந்திரன் ஒருவர் ஜாதகத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெற்று சுப கிரக பார்வையையும் பெற்று இருக்குமேயானால் அந்த ஜாதகர் மிகுந்த மனத்தெளிவுடன் இருப்பார். எதையும் பார்த்த மாத்திரத்தில் கிரகித்துக் கொள்வார். இது தவிர ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் தரும் பல யோகங்களை பார்ப்போம் வாருங்கள்.

சந்திரன் தரும் சுப யோகங்கள்:

கஜகேசரி யோகம்

சந்திரனுடன் இணைந்து அல்லது சந்திரனுக்கு 4,7,10 ஆகிய வீடுகளில் குரு இருந்தால் இந்த யோகம் உண்டு.

இந்த யோகம் இருந்தால் அந்த ஜாதகர் மிகுந்த செல்வாக்குடன் இருப்பார்.

இந்த யோகம் அந்த ஜாதகருக்கு நல்ல பெயரையும், புகழையும் பெற்றுத் தரும்.

பகைவர்களை வெல்லும் ஆற்றலை அந்த ஜாதகர் பெறுவார்.

சந்திர மங்கள யோகம்

ஒரு ஜாதகத்தில் சந்திரனுடன் செவ்வாய் இணைந்து இருந்தால், இந்த யோகம் உண்டு.

இந்த அமைப்பு இருந்தால் நிறைய சொத்துக்கள், வீடு வாசல் போன்றவற்றை எதிர்காலத்தில் அந்த ஜாதகர் வாங்குவார்.

எனினும் பாவக் கிரகங்களின் பார்வை இருப்பின் இந்த அமைப்பு அதிக எதிர்மறை எண்ணங்களை உடன் தந்து விடலாம்.

இதனால் அந்த ஜாதகர் மன சஞ்சலம் அடைந்து கொண்டே இருப்பார்.

அதி யோகம்

சந்திரனுக்கு 6, 7, 8 ஆகிய வீடுகளில் குரு, புதன், சுக்கிரன் ஆகிய இந்த கிரகங்கள் இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ நின்றால் இந்த யோகத்தை தரும்.

இந்த யோகம் இருந்தால் ராணுவம், போலீஸ் போன்ற துறைகளில் மிகப்பெரிய உயர் அதிகாரி உத்தியோகம் அமையப்பெறும்.

பெயரையும், புகழையும் இந்த யோகம் பெற்றுத் தரும்.

சுனபா யோகம்

சந்திரனுக்கு 2-இல் சூரியன், இராகு கேதுக்களைத் தவிர மற்ற கிரகங்கள் இருந்தால் இந்த யோகம் ஏற்படும்.

இந்த யோகம் இருந்தால் அந்த ஜாதகர் உழைப்பினால் முன்னேறுவார்.

அவர் முயற்சி வீண் போகாது. எதிர்காலத்தில் பிரபலமான செல்வாக்கை பெற்று இருப்பார்.

அநபா யோகம்

சந்திரனுக்கு 12-ல் ராகு, கேது போன்ற கிரகங்கள் இல்லாமல் மற்ற கிரகங்கள் இருந்தால் இந்த யோகம் தரும்.

இதையும் படிங்க:  ஈசானிய பாதிப்பை எவ்வாறு சரிசெய்வது?

இதன் பலன் இராஜ யோகத்தை எதிர்காலத்தில் தரும். புகழ் கூடும். செல்வாக்கு கூடும்.

சந்திரன் தரும் மோசமான யோகங்கள்:

கேமத்துருமம்

இது ஒரு மோசமான யோகம் ஆகும்.

சந்திரனுக்கு முன்னும், பின்னும் கிரகங்கள் இல்லாமல் இருந்தால் இந்த யோகம் உண்டாகும்.

இது, நோயையும், செல்வ குறையையும் ஜாதகருக்கு தந்து விடும்.

சகட யோகம்

சந்திரனுக்கு 8 அல்லது 12-ல் குரு இருந்தால் இந்த யோகம் ஏற்படும்.

இந்த யோகத்தில் பிறந்தவர்கள் வண்டி சக்கரம் போல நிலை இல்லாத வாழ்க்கையை பெறுவார்கள்.

இது ஒரு பொல்லாத யோகம். கஷ்டங்கள் தொடர்கதையாகி இருக்கும்.

மோசமான யோகங்களுக்கான பரிகாரம்

தஞ்சையில் இருக்கும் திங்களூர் சந்திர பகவானுக்குரிய சிறந்த பரிகாரத் தலமாகும். ஏதேனும் ஒரு வளர்பிறை திங்கட்கிழமை தினத்தில் காலை 9 மணிக்குள்ளாக அங்கிருக்கும் சந்திர பகவானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி வழிபடுவதால் ஜாதகத்தில் சந்திர பகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

வருடம் ஒருமுறையாவது திருப்பதி சென்று திங்கட்கிழமை திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்.

வளர்பிறை திங்கட்கிழமை மற்றும் பௌர்ணமி தினங்களில், நவக்கிரக சந்நிதியில் இருக்கும் சந்திரனுக்கு மல்லிகை பூ சாற்றி, தயிர் சாதம் நைவேத்தியம் செய்து வழிபட பாதிப்புகள் குறையும்.

பெளர்ணமி தினத்தில் சத்திய நாராயண பூஜையை செய்யலாம்.

பச்சரிசியை திங்கள் கிழமை தானம் செய்யலாம்.

பெளர்ணமியில் அம்பாளுக்கு நெய் விளக்கு ஏற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: