தண்ணீர் அனைத்து உயிரினங்களுக்கும் முதன்மையான வாழ்வாதாரம் ஆகும். தண்ணீர் இல்லாமல் வாழ்வது என்பது நடக்காத ஒன்றாகும். நம் வருங்கால சந்ததியினருக்கு நாம் சேமித்து வைக்கவேண்டிய மிகப்பெரிய சொத்து தண்ணீர் மட்டுமே. மரத்தை அழித்து அதில் பல கட்டிடங்கள் கட்டுகிறோம். அதனால் வரும் பின் விளைவுகளை பற்றி யோசிக்க மறந்து விட்டோம்..
அந்த காலத்தில் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் பழக்கம் என்பதே கிடையாது. ஆனால் இன்றோ அது சாதாரண விஷயமாக மாறிவிட்டது. ஏனென்றால் அதற்கு காரணம் நம் அலட்சியம் மட்டுமே..
அதேபோல் வாகனங்களினால் ஏற்படும் மாசு, இயற்கை வளங்களை சுரண்டுதல், அதிகரித்து வரும் தொழிற்சாலைகளினால் ஏற்படும் மாசு, தண்ணீருக்கான பயன்பாடு அதிகரித்தல் போன்றவைகளால் தான் இந்த காலக்கட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு மிகவும் அதிகமாக இருக்கிறது.
உலக தண்ணீர் தின வரலாறு:
தண்ணீரின் அவசியத்தை வலியுறுத்தி 1992ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் (Rio De Janeiro) நடந்த சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் 1993ஆம் ஆண்டு முதல் உலக நீர் நாள் அல்லது உலக தண்ணீர் தினமானது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
தண்ணீரின் அவசியம்:
தண்ணீரானது என்றுமே வாழ்வதற்கு இன்றியமையாத தேவைகளுள் ஒன்றாக இருக்கிறது. அன்றைய காலக்கட்டத்தில் குறைந்த அளவில் தரையை தோண்டினாலே நிலத்தடி நீர் கிடைத்த காலங்கள் மாறி, இன்றைய காலக்கட்டத்தில் பல அடி ஆழம் தோண்டினாலும் வறண்ட நிலையிலேயே இருக்கிறது.
இது வருங்கால தலைமுறைகளின் வாழ்க்கையை மிகுந்த கேள்விக்குறியாக்குகிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தண்ணீரின் முக்கியத்துவத்தை மறவாமல் உணர்த்தும் வகையில்தான் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் தினத்தை கடைப்பிடித்து வருகின்றனர்.
தண்ணீரின் முக்கியத்துவம்:
“நீரின்றி அமையாது உலகு” என்ற திருவள்ளுவரின் கூற்றை யாராலும் மறுக்க முடியாது.
உலக நாடுகளில் சுமார் 40 சதவீத மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். பல கோடி மக்கள் நீர் பற்றாக்குறை உள்ள பகுதியில் வசித்து வருகிறார்கள்.
குடிநீர் மாசுபடுவதாலும், வறட்சியாலும் எதிர்கால உலகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. எனவே, தண்ணீரின் முக்கியத்துவத்தை அறிந்து செயல்படுவோம்.
தண்ணீர் சேமிப்பில் முக்கிய பங்கு வகிப்பது ஏற்கனவே உள்ள நீர் ஆதாரங்களை பாதுகாப்பதுதான். அதை பாதுகாப்பதன் மூலம் வருங்கால தலைமுறைகளின் வாழ்க்கையில் நீர் பற்றாக்குறை இல்லாமல் இருக்க உதவியாக அமையும்.
எனவே அனைவரும் வருங்கால தலைமுறைகளின் வாழ்க்கையை எண்ணி தண்ணீரை அளவாக பயன்படுத்தவும், தேவையில்லாமல் செலவிடுவதை தவிர்க்கவும் இந்நாளில் உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்.
உலகை வாழ வைக்கும் அமிர்தமான தண்ணீரை சேமிப்போம்… தண்ணீர் கிடைக்க உதவியாக இருக்கும் மரங்களை பாதுகாப்போம்…