பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு ரஷ்யா பதிலளித்துள்ளது. மோடியின் ரஷ்யப் பயணத்தைக் கண்டு மேற்கத்திய நாடுகள் பொறாமை கொள்கின்றன என்று டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், பிரதமர் மோடியின் வருகையை மேற்கத்திய நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், பொறாமையுடன் பார்க்கின்றன என்று பெஸ்கோவ் கூறினார். மோடியும், புதினும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும், பிரதிநிதிகளுடன் இணைந்து இரண்டு விவாதங்கள் நடத்தப்படும் என்றும் தெரியவந்துள்ளது. இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவுகளில் இது ஒரு முக்கியமான பயணம் என்று அவர் கூறினார்.
5 ஆண்டுகளுக்கு பிறகு மோடி ரஷ்யா செல்கிறார்
22-வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க புதினின் அழைப்பின் பேரில் மோடி ரஷ்யா செல்கிறார். 2022ஆம் ஆண்டு உக்ரைனில் போர் தொடங்கிய பின்னர் மோடியின் முதல் ரஷ்யா பயணம் இதுவாகும். ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 2019 இல், தூர கிழக்கு நகரமான விளாடிவோஸ்டாக்கில் பொருளாதார உச்சி மாநாட்டிற்காக மோடி ரஷ்யா சென்றார். அதன் பிறகு, புடின் கடைசியாக 2021 இல் இந்தியா வந்தார்.