ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் பாகிஸ்தான் உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளில் உணரப்பட்டது. பாகிஸ்தானில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 300 கி.மீ தொலைவில் உள்ள ஜுர்மில் 180 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்து குஷ் மலைப்பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு 10.17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானின் கைபர் ஃபங்க்துன்க்வா மாகாணத்தில் பலத்த உயிர் சேதம் மற்றும் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ள நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று பாகிஸ்தான் அவசர சேவையின் செய்தித் தொடர்பாளர் பிலால் ஃபைசி தெரிவித்தார். காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் வட இந்தியாவிலும் காணப்பட்டது. டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பூமி அதிர்ந்தது. டெல்லியில் சுமார் 2 நிமிடங்களுக்கு பூமி குலுங்கியதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதாகவும், அச்சத்தில் சாலைகளில் ஓடுவதாகவும் பலர் தெரிவித்தனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.