பாகிஸ்தான் கடந்த சில நாட்களாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அந்த நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதனால் அங்கு எதையும் வாங்குவதற்கு கடும் சுமையாக உள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
நாம் எப்போதும் பயன்படுத்தும் பால் முதல் கோழிக்கறி வரை அனைத்து விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. தற்போது அங்கு ஒரு லிட்டர் பால் விலை ரூ.190ல் இருந்து ரூ.210 ஆக உயர்ந்துள்ளது. பிராய்லர் கோழி கடந்த இரண்டு நாட்களில் கிலோவுக்கு ரூ.30-40 அதிகரித்துள்ளது. இதனால், கோழியின் விலை சில பகுதிகளில் கிலோ ரூ.480-ரூ.500 எனவும், மற்ற பகுதிகளில் ரூ.700-ரூ.780 வரை விற்கப்படுகிறது.
கராச்சியில் ரூ.620-ரூ.650 ஆக இருந்த ஒரு கிலோ கோழிக்கறியின் விலை சமீபத்தில் ரூ.780ஐ எட்டியது. ராவல்பிண்டி, இஸ்லாமாபாத் போன்ற சில நகரங்களில் கோழிக்கறி விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.700 முதல் 780 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் எலும்பு இல்லாத கோழியின் விலை கிலோ ரூ.1,000-1,100-ஐ எட்டியுள்ளது.
இதுகுறித்து கோழி மொத்த விற்பனையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கமல் அக்தர் சித்திக் கூறுகையில், “பொருளாதார நெருக்கடியும், தீவன தட்டுப்பாட்டால் கோழிப்பண்ணை தொழில்கள் பல மூடப்பட்டிருப்பதும் கோழி விலை உயர்வுக்கு முக்கிய காரணம்” என தெரிவித்தார். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த விலையை பார்த்து சிக்கன் பிரியர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.