உலக நாடுகள் பலவும் சமீப காலமாக நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஜப்பானின் இஷிகாவா மாகாணத்தில் ஒரே நாளில் 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதன் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதியடைந்த அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு கருதி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட பீதி குறைவதற்குள் அங்கு மீண்டும் நிலநடுக்கத்தின் அதிர்வு உணரப்பட்டது.
இம்முறை கடலுக்கு அடியில் சுமார் 12 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகள் பதிவாகியுள்ளதாகவும், மக்கள் தங்கள் வீடுகளில் பலத்த அதிர்வுகளை உணர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால், பலர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். ஆனால், இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் அதிர்ச்சியால் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். 22 பேர் படுகாயமடைந்த நிலையில், மீட்புப் பணியாளர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் சேதம் குறித்த முழு விவரம் தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.