தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் ஊழியர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. முழு நேர நிரந்தர ஊழியர்களுக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு இருக்காது என அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நிறுவன சிஇஓ சத்யா நாதெள்ளா ஊழியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நிச்சயமற்ற சூழ்நிலையில் செலவுகளைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர், சில மாதங்கள் பரிசீலனை செய்து முடிவெடுத்தோம். நிறுவனத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு தேவையான திட்டத்தை தயாரிப்பதற்காக எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். நிதி நிலைமை சீராக இல்லாததால், கடந்த ஆண்டைப் போல் இழப்பீடாக பெரிய தொகையை ஒதுக்க முடியாது என சத்யா நாதெள்ளா கூறினார். எனினும் ஊழியர்களுக்கு பதவி உயர்வுகள் தொடரும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
சம்பள உயர்வு தற்போதைக்கு நிறுத்தப்படுவதைத் தவிர, ஊழியர் போனஸ் மற்றும் பங்கு வெகுமதிகளுக்கு குறைவான நிதி ஒதுக்கப்படும். அதே சமயம், சில மணி நேரம் வேலை செய்யும் ஊழியர்களின் சம்பளமும் உயரும். இந்த ஆண்டு முழு நேர நிரந்தர ஊழியர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு வழங்கப்படாது என அவர் விளக்கமளித்துள்ளார். நிறுவனம் எடுத்த எதிர்பாராத முடிவு குறித்து ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.