பாகிஸ்தானில் உள்ள லாகூர், உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக மாறியுள்ளது. லாகூரில் காற்றின் தரம் கணிசமாக மோசமடைந்துள்ளது. இந்த நகரத்தில் காற்றின் தரக் குறியீடு (AQI) 394ஐ எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம், லாகூர் ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக மாறியுள்ளது. ஆபத்தான புகை மூட்டத்தால், நகரவாசிகள் இருமல், சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை சந்தித்து வருவதாகத் தெரிகிறது.
இந்த பின்னணியில் அதிகரித்து வரும் மாசு காரணமாக, பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் அரசு, சமீபத்தில் புகை மூட்டத்தின் தாக்கத்தை குறைக்க செயற்கை மழையை பொழிய செய்தது. ஆனாலும் மாசு குறையவில்லை. தொடர்ந்து பயிர் கழிவுகளை எரிப்பதாலும், தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகையாலும் காற்று மாசு பிரச்னை அதிகரித்து வருவதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.