ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக லிண்டா யாக்கரினோ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க், தலைமை பொறுப்பை வகித்து வந்தார். அந்த நிறுவனத்தில் பல அதிரடி மாற்றங்களை செய்து வந்த எலான் மஸ்க் தலைமை பொறுப்பை தொடர்ந்து வகிக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து தன்னை பின்பற்றும் 12.2 கோடி பேரிடம் வாக்கெடுப்பு ஒன்றையும் நடத்தினார். வாக்கெடுப்பின் முடிவுக்கு கட்டுப்படுவதாகவும் அவர் உறுதி கூறியிருந்தார். பெரும்பாலானோர் பொறுப்பில் இருந்து விலகலாம் என வாக்களித்திருந்தனர். இதையடுத்து சிஇஓ பதவிக்கு முட்டாள் ஒருவரை கண்டுபிடித்த பிறகு, விரைவில் தலைமை பதவியில் இருந்து விலகுவேன் என தெரிவித்திருந்த எலான் மஸ்க் புதிய தலைமை அதிகாரியாக லிண்டா யாக்கரினோவை நியமனம் செய்துள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ லிண்டா யாக்கரினோ பென்சில்வேனியா பல்கலைக்கழக முன்னாள் மாணவர். தாராளவாத கலைகள் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் பட்டம் பெற்றவர்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக என்.பி.சி யுனிவர்சல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நிறுவனத்தின் விளம்பர செயல்திறனை அளவிடுவதற்கான ஒரு தொழில்துறை வக்கீலாகவும் பணி புரிந்துள்ளார். டர்னர் என்டர்டெயின்மென்ட்டில் 19 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
மியாமியில் கடந்த மாதம் நடந்த ஒரு விளம்பர மாநாட்டில் எலான் மஸ்க்கை பேட்டி கண்டுள்ளார். இந்நிலையில் யாக்கரினோவை ட்விட்டரின் சிஇஓ- வாக எலான் மஸ்க் நியமித்துள்ளார். யாக்காரினோ என்.பி.சி யுனிவர்சல் நிறுவனத்திலிருந்து வெளியேறினால் அது அந்நிறுவனம் பெரும் இழப்புக்கு உள்ளாகும் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்ரினோவை நியமனம் செய்த எலான் மஸ்க் ‘டுவிட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்கரினோவை வரவேற்பதில் மகிழ்ச்சி’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.