வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான பெரிய அளவிலான போராட்டங்களை அடுத்து, செவ்வாய்கிழமை காலை முதல் டாக்காவுக்கான விமானங்களை ஏர் இந்தியா ரத்து செய்துள்ளது.
வங்கதேசத்தில் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடுக்கு எதிராக மக்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்நாட்டில் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியதால், பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில், அந்நாட்டுக்கான விமானங்களை பல விமான நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன. இண்டிகோ மற்றும் ஏர் விஸ்தாரா செவ்வாய்க்கிழமையும் டாக்காவுக்கான தங்கள் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளதாக இரு நிறுவனங்களின் அதிகாரிகளும் தெரிவித்தனர்.
விஸ்தாரா ஏர்லைன்ஸ் மும்பையிலிருந்து டாக்காவிற்கு தினசரி விமானங்களையும், டெல்லியிலிருந்து வாரத்திற்கு மூன்று விமானங்களையும் இயக்குகிறது. ஏர் இந்தியாவும் தினமும் மாலை டாக்காவிற்கு விமான சேவையை இயக்குகிறது.
பங்களாதேஷின் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், நிலைமையைப் பொறுத்து விமானங்களை இயக்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் கூறினார்.