அமெரிக்கா மற்றும் கனடாவில், வரலாறு காணாத கடுங்குளிர் நிலவுகிறது. மைனஸ் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதால், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களையிழந்துள்ளன. மோசமான வானிலை காரணமாக, பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் கனடாவில், ஆண்டுதோறும் நிலவும் குளிரைவிட, இந்த ஆண்டு, பல மாகாணங்களிலும் வரலாறு காணாத பனிப்பொழிவு நிலவுகிறது. செவ்வாய் கிரகத்தில் காணப்படும் குளிரைவிட மோசமானதாக கருதப்படும் இந்தக் குளிரால், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களையிழந்துள்ளன. சுமார் 15 லட்சம் வீடுகளில் வசிக்கும் மக்கள், மின்சாரமின்றி தவித்து வருகின்றனர்.
இதனிடையே, முன்னெப்போதும் இல்லாத வகையில், குளிர்கால புயலும் வீசி வருவதால், மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில், அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
மான்டானா மாகாணத்தில், மைனஸ் 45 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது. உறைய வைக்கும் பனிப்பொழிவு, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.