லிபியாவில் புயலால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் சுமார் 6 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
டேனியல் என்று பெயரிடப்பட்ட இந்தப் புயல் கடந்த வாரம் மத்தியதரைக் கடலின் ஒரு பகுதியான அயோனியன் கடலைத் தாக்கியது. இந்த புயல் செப்டம்பர் 10 அன்று லிபியாவின் பெங்காசியை அடைந்தது. மணிக்கு 165 கிமீ வேகத்தில் காற்று வீசியதால் லிபியாவின் பல பகுதிகளில் கனமழை பெய்தது.
இந்த கனமழை காரணமாக டெர்னாவில் இரண்டு அணைகள் உடைந்தன. இதனால் மக்களின் வீடுகள், அலுவலகங்களில் வெள்ளம் புகுந்தது. டெர்னா பகுதியில் மட்டும் 5000 பேர் உயிரிழந்தனர். 20000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பெங்காய் கடற்கரைப் பகுதியிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், சாலைகள், பாலங்கள், வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். லிபியாவில் வெள்ளம் காரணமாக இதுவரை 6,000 பேர் உயிரிழந்துள்ளதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
லிபியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் குறித்து உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் டெரெக் அல் ஹராஸ் கூறுகையில், “டெர்னாவில் மட்டும் 5200 பேர் உயிரிழந்துள்ளனர். 20000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர். வரும் நாட்களில் உயிர் இழப்புகள் அதிகரிக்கும் சூழல் உள்ளது” என்றார்.
