சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள நான்சாங் கவுண்டியில் பனிமூட்டம் அடர்ந்து காணப்படுவதால் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரிவதில்லை. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று அதிகாலையில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது. பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டன. இந்த சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் உடனடியாக அங்கு வந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்களை அப்புறப்படுத்திய போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடத்தி வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, நான்சாங் மாவட்ட போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். அடர் பனிமூட்டம் காரணமாக சாலை விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதசாரிகள் சாலையில் நடக்க வேண்டாம், எந்த சூழ்நிலையிலும் வாகனங்களை முந்திச் செல்ல முயற்சிக்க வேண்டாம், வாகனங்களுக்கு இடையே இடைவெளியை பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
