பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. பணவீக்கம் பெருமளவில் அதிகரிக்கும் போது மக்களின் நிலை மோசமாகிவிடும். அந்த வகையில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
மக்களுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், பஞ்சாப் மாகாணத்தில் அரசு வழங்கும் இலவச மாவுகளை எடுக்க மக்கள் முண்டியடித்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் இதில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
பஞ்சாபின் சாஹிவால், பஹவல்பூர், முசாபர்கர், ஒகாரா, பைசலாபாத், ஜெஹானியன் மற்றும் முல்தான் மாவட்டங்களில் நெரிசல் சம்பவங்கள் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாட்டில் பணவீக்கம் 50 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. ஆனால் ரம்ஜான் மாதம் என்பதால் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதை தவிர்க்க முடியாது. இந்தப் பின்னணியில், மக்களுக்கு ஏற்படும் செலவுச் சுமையிலிருந்து ஓரளவு நிவாரணம் அளிக்கும் வகையில் அரசு கோதுமை மாவை இலவசமாக வழங்கி வருகிறது.
இதனால், மக்கள் மாவுக்காக அல்லாடி வருகின்றனர். சில விநியோக மையங்கள் உள்ளன, அவை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்குவதால், அவற்றைப் பெறுவதற்கு போட்டி போடுகின்றனர். சில பகுதிகளில், விநியோக மையத்திற்கு வருவதற்குள், உள்ளூர்வாசிகள் லாரியை கொள்ளையடித்துச் செல்கின்றனர்.