தமிழ்நாடுமாவட்டம்

ஓபிஎஸ்ஸின் ‘கடைசி’ பட்ஜெட்.. மீண்டும் அரியணை ஏற்றும்விதமாக அதிரடி அறிவிப்புகள் இடம்பெறுமா?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று (பிப். 23) தாக்கல்செய்கிறார்.

ஆளுநர் உரையுடன் 2021இன் முதல் கூட்டத்தொடர்

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடப்பாண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நான்கு நாள்கள் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் பிப்ரவரி 5ஆம் தேதியுடன் முடிவுற்றது. இதையடுத்து மறு தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் சட்டப்பேரவையை ஒத்திவைத்தார்.

ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு

இக்கூட்டத் தொடரில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையைப் புறக்கணிப்பு செய்து வெளியேறினர்.

கடந்த சட்டப்பேரவையில் பிப்ரவரி 3ஆம் தேதி அமைச்சர் இரா. துரைக்கண்ணு, பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் வி. சாந்தா ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.

பின்னர், பிப்ரவரி 4ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் பேரவையில் நடைபெற்றது.

110 விதியின்கீழ் அறிவிப்புகள்

சட்டப்பேரவையின் கடைசி நாளான பிப்ரவரி 5 அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் 16.43 லட்சம் விவசாயிகள், கூட்டுறவு வங்கியில் பெற்ற கடன் தொகையான 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடைவிதித்து சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தின்போது பதியப்பட்ட சாதாரண வழக்குகள் திரும்பப் பெறுவதாகவும், அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி போராடிய நிலையில், அவர்கள் மீது இருந்த அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்தார்.

10729775 ops

இடைக்கால பட்ஜெட்

இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்ய, தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு கலைவாணர் அரங்கத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் கூடுகிறது.

நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழ்நாட்டின் இடைக்கால நிதிநிலை அறிக்கையை பேரவையில் தாக்கல்செய்கிறார். இதன்மூலம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் பத்தாவது முறையாக ஓபிஎஸ் நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்கிறார்.

இந்நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை நோக்கிய பல்வேறு புதிய அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளதால் தேர்தலுக்கான நிதியும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதன்படி, 110 விதியின்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதியோ அல்லது அடுத்த நாளோ முக்கிய அதிரடி அறிவிப்புகளை வெளியிடலாம் எனவும் கூறப்படுகிறது.

 

பட்ஜெட் மீதான விவாதம்

அத்துடன் பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் கூட்டப்பட்டு, எத்தனை நாள்கள் பேரவையை நடத்துவது என்று முடிவு எடுக்கப்படுகிறது.

சட்டப்பேரவை மூன்று நாள்கள் நடைபெறும் என்றும், நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூட்டத்தொடரின் கடைசி நாள் பதில் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Back to top button
error: Content is protected !!