ஆன்மீகம்

பெருமாள் கோயில்க‌ளில் மூன்று முறை தீர்த்த‌ம் ஏன்?

உலகை படைத்து, காத்து, அழித்து வரும் மூர்த்திகளில், உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் காத்தருள்கின்ற ஸ்ரீகிருஷ்ண பகவான், உலகின் பல்வேறு தலங்களில் ஒவ்வொரு விதமான அழகு மற்றும் சக்தியுடன் காட்சி தருகிறார். அத்தகைய சக்தி வாய்ந்த இடங்களில் கட்டப்பட்ட பிரமாண்டமான கோயில்கள் இன்றைக்கும் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் நமது வழிபாட்டுக்குரிய திருத்தலமாக இருந்து வருகிறது. இவற்றில், 108 திவ்ய தேசங்கள் மற்றும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோயில்கள் எனும் பெருமை கொண்ட தலங்களும் இருக்கின்றன. இத்தகைய பெருமை வாய்ந்த கோயில்கள் மட்டுமன்றி, எந்த பெருமாள் கோயிலாக இருந்தாலும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று இறைவனை தரிசித்து பெருமாளின் பேரருளைப் பெறுவது சிறப்பாகும். அத்தகைய பெருமாளின் சிறப்பை நாம் கூறுவதற்கு எத்தனை பிறவி எடுத்தாலும் காணாது. இந்நிலையில், பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபடும்போது எவ்வாறு வழிபட வேண்டும்? கோயிலில் தீர்த்தம் எதற்காக கொடுக்கப்படுகிறது? என்று பார்க்கலாம்.

வழிபாடு

பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபடும்போது, துளசி வாங்கி கொண்டு செல்ல வேண்டும்.

பெருமாளுக்கு துளசி மிகவும் பிடித்தமானது என்பதால், துளசி கொண்டு அர்ச்சிக்கும்போது, நாம் விரும்பி கேட்பது அனைத்தும் நிறைவேறும்.

துளசி இலையின் நுனியில் நான் முகனும், மத்தியில் திருமாலும், அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில் பனிரெண்டு ஆதித்யர்களும், பதினோரு ருத்திரர்களும், எட்டு வசுக்களும், இரு அஸ்வினி தேவர்களும் எழுந்தருளியிருக்கிறார்கள்.

துளசியில் அனைத்து தேவர்களும் இருப்பதால், மகத்துவம் மிக்க பெருமாளுக்கு அது படைக்கப்படுகிறது.

பெருமாளுக்கு திருமஞ்சனம் நடத்தும் போதும், துளசி கலந்த தண்ணீரால் தான் திருமஞ்சனம் செய்வது குறிப்பிடத்தக்கது.

தீர்த்தம் எதற்காக?

பெருமாள் கோயிலில் பெருமாளை தரிசனம் செய்த பிறகு துளசி தீர்த்தம் வழங்குவதை பக்தர்கள் அனைவரும் வாங்கி அருந்துவதுண்டு.

பெருமாள் கோயிலில், பெருமாளின் சந்நிதியில் பிரசாதமாகத் தரப்படுகிற துளசி தீர்த்தம் மகத்துவம் வாய்ந்தது. பச்சைக்கற்பூரம் உடன் சேர்ந்த அதன் நறுமணமும், உடலுக்கு தரும் புத்துணர்ச்சியை தர வல்லது.

துளசி தீர்த்தம் மிகச்சிறப்பும் மேன்மையும் கொண்டதால் அதைப்புண்ணிய தீர்த்தம் என்று கூறுகின்றனர்.

கோயிலில் கிடைக்கும் துளசி தீர்த்தம் மருத்துவ குணங்கள் உடையது. சுத்தமான நீரை விட துளசி தீர்த்தம் பல ஆயிரம் மடங்கு நன்மை தருவதாகும். துளசி இலை நீரானது, கங்கை நீருக்கு சமமாக கருதப்படுகிறது.

பெருமாள் கோயிலில் எதற்காக துளசி தீர்த்தம் வழங்கப்படுகிறது என்றால், பெருமாளின் பாதத்தில் அர்ச்சிக்கப்பட்ட துளசி புனிதமாகும்போது, அதனை திருப்பதியில் பெருமாளுக்கு சாற்றப்படுகிற பச்சைக்கற்பூரம், தண்ணீர் சேர்த்து கொடுக்கும்போது வைகுண்டத்தில் உள்ள பாற்கடல் தீர்த்தத்திற்கு இணையாக கருதப்படுகிறது.

அதனால் தான், துளசி தீர்த்தம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், சகல தோஷங்களையும், நோய்களையும் தீர்த்தருளும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அத்துடன், அறிவியல் ரீதியாக துளசி தீர்த்தம் சிறந்த கிருமிநாசினியாக உள்ளது. இந்த தீர்த்தத்தை குடித்தால் உடலில் எந்த சளியும் வராது, காய்ச்சல் இருந்தால் ஓடிவிடும்.

மூன்று முறை எதற்காக

முத‌ல் முறை தீர்த்த‌ம் : ப்ர‌த‌மம் கார்ய‌ சித்ய‌ர்த்த‌ம்

ந‌ம் செய‌ல்க‌ளில் வெற்றி பெற‌ வேண்டி வழங்கப்படுகிறது.

இர‌ண்டாம் முறை தீர்த்த‌ம் : த்விதீய‌ம் த‌ர்ம‌ஸ்தாப‌ன‌ம்

நாம் வாழ்க்கையில் தர்ம நெறிகளை க‌டைபிடித்து வாழவேண்டும் என்பதற்காக வழங்கப்படுகிறது.

மூன்றாம் முறை தீர்த்த‌ம் : த்ரிதீய‌ம் மோக்ஷ‌ ப்ரோக்த‌ம் குணார்ன‌வ‌ம்

மெய்ப்பொருளான‌ ப‌க‌வானை உண‌ர‌ வேண்டும் என்பதற்காக வழங்கப்படுகிறது.

மந்திரம்

பெருமாள் சந்நிதியில், துளசி தீர்த்தம் பெறும்போது, அதை கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி தீர்த்தம் பருகுவது, மகா புண்ணியமாகும்.

அகால ம்ருத்யு ஹரணம்

ஸர்வ வியாதி நிவாரணம்

ஸமஸ்த பாப ஸமனம்

விஷ்ணு பாதோதகம் சுபம்

விளக்கம்

அனைத்து பாவங்களில் இருந்தும், வியாதிகளில் இருந்தும், அகால மரணத்தில் இருந்தும் நம்மை விடுவிப்பவரான மகா விஷ்ணுவின் பாதங்களை வணங்குகிறேன் என்பதே இதன் அர்த்தமாகும்.

என்று சொல்லி, துளசி தீர்த்தம் பருகுங்கள். பருகி முடித்ததும் நாராயணா என்று மூன்று முறை சொல்லுங்கள். அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறுவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: