தமிழ்நாடு

அமித்ஷா-ரஜினி சந்திப்பு இல்லை.. ஏன்?

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா 2 நாள் பயணமாக நாளை தமிழகம் வருகிறார். டில்லியில் இருந்து காலை 10.50 மணிக்கு தனி விமானத்தில் புறப்படும் அவர் மதியம் 1.40 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைகிறார்.

ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் தங்கும் அமித்ஷா மாலை 4.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கலைவாணர் அரங்கத்திற்கு வருகிறார். அங்கு, திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடியில் புதிய நீர்த்தேக்க திட்டத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழாவும், ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்ட அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறுகிறது.

மேலும், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படும் அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்கிறார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரை ஆற்றுகிறார். விழா முடிந்ததும் மாலை 6.30 மணிக்கு மீண்டும் ஓட்டல் லீலா பேலசுக்கு மத்திய மந்திரி அமித்ஷா வருகிறார். அங்கு இரவு 7 மணிக்கு தமிழக பா.ஜ.க. மாநில, மாவட்ட நிர்வாகிகளையும், பல்வேறு அணிகளின் தலைவர்களையும் அமித்ஷா சந்தித்து பேசுகிறார். இரவு 8.30 மணிக்கு பா.ஜ.க. உயர்மட்டக் குழுவினருடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த சந்திப்பின்போது, எதிர்வரும் தமிழக சட்டசபை தேர்தல் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. கூட்டணி குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. கூட்டம் முடிந்தவுடன் பத்திரிகையாளர்கள் மத்தியில் மத்திய மந்திரி அமித்ஷா பேட்டியளிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அன்று இரவு ஓட்டலில் தங்கும் அவர், மறுநாள் (22ம் தேதி) காலை 10.15 மணிக்கு தனி விமானத்தில் டில்லி செல்கிறார்..

அமித்ஷாவின் வருகை தமிழக தேர்தல் தொடர்பானது என கூறப்படும் நிலையில் ரஜினி-அமித்ஷா சந்திப்பு நடைபெறும் என பரபரப்பு கூறப்பட்டது. ஆனால் தற்போது அமித்ஷாவின் பயணத்திட்டத்தில் இது குறித்த எந்த தகவலும் இல்லை. அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினி இன்னமும் முடிவெடுக்கவில்லை.

அண்ணாத்தை திரைப்படத்தை முடித்துக்கொடுத்த பின்னரே தன்னுடைய அரசியல் தொடர்பான பணிகளை துவக்க ரஜினி முடிவு செய்திருப்பதால் தற்போது இது குறித்துபேச எதுவும் இல்லை என ரஜினி தரப்பில் கூறப்பட்டு விட்டதால் அமித்ஷா-ரஜினி சந்திப்பு கேன்சல் ஆகி விட்டதாக போயஸ்கார்ட்ன் தகவல்கள் தெரிவிக்கின்றன..

loading...
Back to top button
error: Content is protected !!