ஆன்மீகம்

மார்கழியில் சுப காரியங்கள் ஏன் நடத்துவது இல்லை!

மார்கழி மாதம் என்றாலே நமது நினைவுக்கு முதலில் வருவது ஒவ்வொரு வீட்டின் முகப்பிலும் மிளிரும் அழகிய கோலங்கள் தான். மார்கழி மாதத்தின் பெருமையை ஆண்டாள்,”மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!” என்ற பாடலில் விளக்குகிறார்.

ஆண்டாள் மட்டும் அல்ல, மாணிக்கவாசகரும் கூட திருவெம்பாவையில் மார்கழியின் அருமை பெருமைகளை இவ்வாறு கூறுகிறார்,” போற்றியாம் மார்கழி நீர் ஆடேலோர் எம்பாவாய்!” என்று மார்கழி மாத நீராடலுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பாடுகிறார்.

சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் மாதமே மார்கழி மாதம் ஆகும். அந்த வகையில் ஜோதிடத்தின் அடிப்படையில் கால புருஷ தத்துவ விதியின் படி மார்கழி 9 ஆவது மாதம் ஆகும். மார்க்கண்டேயர் மார்கழி மாதத்தில் பிறந்தவர். அந்த வகையில் மார்க்கண்டேயபுராணத்தின் படி மரணத்தை வெல்லக் கூடிய மாதமாகவே மார்கழி பார்க்கப்படுகிறது. சிவ புராணத்தின் அடிப்படையில் ம்ருத்யுஞ்ச ஹோமம் செய்ய சிறந்த மாதம் மார்கழி. தேவ குருவான பிரகஸ்பதியின் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால், இம்மாதத்தை தேவ லோகத்தின் காலைப் பொழுதாகச் சொல்வார்கள்.

கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர், “மாதங்களில் நான் மார்கழி என்கிறார்!”… அந்த வகையில், சாஸ்திரங்களின் அடிப்படையில் மார்கழி மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தால் வாசு தேவன் என்றும்…. ஒருவேளை பெண் குழந்தை பிறந்தால், வாக்தேவி என்றும்… பெயர் சூட்டுவது சிறப்பு.

இந்த மார்கழி மாதம், இறைவனுக்கான மாதம். அதனால், தான் மார்கழி மாதத்தில் திருமணம் செய்யப்படுவது இல்லை…வாஸ்து பூஜைக்கும் கூட இடம் இல்லை.

மார்கழி மாதமும் கன்னிப் பெண்களும் : மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் நல்ல கணவனை வேண்டி பாவை நோன்பு இருப்பார்கள். அத்தகைய நோன்பின் பலனாக தை மாதத்தில் அவர்களின் நல் வாழ்வுக்கான வழி அமையும் என்பதை மனதில் கொண்டு “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்னும் பழமொழியும் வழக்கில் வந்ததாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

மார்கழி மாதமும் சிறப்பு மிக்க பாவை நோன்பும் : ஆயர்பாடியில் கோபியர்கள் மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஆற்றிற்குச் சென்று நீராடி மண்ணால் செய்த காத்யாணி தேவியை வழிபட்டு தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வழிபாடு நடத்தினர். பெண்கள் கடைப்பிடித்த விரதமாயின் இவ்விரதம் பாவை நோன்பு என்று வழங்கலாயிற்று. ஆண்டாள் பாவை நோன்பினை மேற்கொண்டே அரங்கனை கணவனாக அடைந்தாள். ஆண்டாள் பாவை நோன்பின்போது நெய், பால் முதலியவற்றை உண்ணாமலும், கண்ணுக்கு மையிடாமல், தலையில் மலர் சூடாமல் புறஅழகில் நாட்டம் செலுத்தாமல் இறைநாட்டத்தில் மட்டும் மனதினைச் செலுத்தி பாவைநோன்பினை மேற்கொண்டாள். எனவே கன்னிப்பெண்கள் நல்ல கணவன் கிடைக்க மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து நீராடி கோவிலுக்குச் சென்று ஆண்டாள் எழுதிய திருப்பாவையைப் பாடி வழிபாடு நடத்துகின்றனர். திருமணமான பெண்கள் மகிழ்ச்சியான மணவாழ்வு நீடிக்க வேண்டியும், குடும்ப நலன் வேண்டியும் இவ்விரத்தினை மேற்கொள்கின்றனர். பாவை நோன்பு 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

இதையும் படிங்க:  திலகம் இடுவதில் கூட சில சாஸ்திர சம்பிரதாயங்கள் உண்டு!

விடியற் காலையில் மார்கழி மாதத்தில் கோலமிடக் காரணம் : தட்சிணாயன காலம் மார்கழியுடன் முடிவடைகிறது. அதாவது சூரியனுடன் தெற்கு இயக்கம் முடிவடையும் காலம். இந்த நேரத்தில் சூரியனுடைய கதிர்வீச்சு பல பிரச்சனைகளை தரக்கூடியது. இதன் காரணமாகவே மார்கழி மாதத்தில் எழுந்து நீராடி இறைவனை வழிபடுகிறோம். கோலமிட்டு மகாலக்ஷ்மியை வீட்டிற்கு அழைக்கிறோம்.

அப்படியாக, இறைவனை வழிபடுவதால் நாடி, நரம்புகள் வலுவடையும். நீண்ட ஆயுள் கிடைக்கப்பெறும். இந்த மாதத்தை சிலர் சூன்ய மாதம் என்று சொல்கின்றனர். திருமணம் போன்ற சுப காரியங்களை கூட இந்த மாதத்தில் செய்வதில்லை. இதற்கு காரணம், இறைவனை வழிபடுவதற்காகவே பெரியோர்கள் கொடுத்த மாதம் “மார்கழி மாதம்”. இந்த மாதத்தில் தியானம், யோகா, தெய்வீகம், ஆன்மிகம் என்று இருந்தால் சாதகமான அதிர்வுகளைக் கொடுக்கும். மற்றபடி இது முற்றிலும் கெடுதலான மாதம் அல்ல. இறைவனுக்காகவே ஒதுக்க வேண்டிய மார்கழி மாதத்தை திருமணம் போன்ற லௌகீக வாழ்க்கைக்கு தேவையான காரியங்களில் செலவிடுவது இறை பக்திக்கு ஏற்றது அல்ல என்பதற்காகவே மார்கழி மாதத்தை சூன்ய மாதம் என்கின்றனர். இது முற்றிலும் இறைவனுக்கான மாதம்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: