இரவில் நாய்கள் குரைப்பது ஏன்?
இரவில் திடீரென நாய் குரைத்தால் நம்மில் பலருக்கு பீதி பிடிக்கத் தொடங்கும். ஒரு நாயின் குரைப்பொலி அந்த ஊர் முழுவதிலுமுள்ள ஏனைய நாய்களையும் குரைக்கவைக்கும்.
முன்பெல்லாம் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் இரவில் ரோந்து செல்லும்போது அவர்களை முதன்முதலில் கண்ட நாய் குரைக்க ஆரம்பிக்கும்.
அதனைத்தொடர்ந்து ஊரிலுள்ள ஏனைய நாய்களும் குரைக்கத்தொடங்கும்.
நாய்களின் இந்த செயன்முறை ஒரு வகையான எச்சரிக்கை சமிக்கை என்று ஒருசாரார் கூறுகின்றனர்.
இன்னொருசாரார் ஒரு நாயின் அவலக் குரலை ஏனைய நாய்களும் புரிந்துகொண்டு பயத்தின் வெளிப்பாட்டால் சேர்ந்து குரைக்கின்றன என்று கூறுகின்றனர்.
நாய்க்கு நுண்ணிய பார்வையும் மிக நுண்ணிய கேள்திறனும் இருப்பதாக கூறப்படுகின்றது.
இதனால் நாய் இரவில் குரைக்கின்றபோது பேயைப் பார்த்து குரைப்பதாக சிலர் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.
சில நாய்கள் ஊளையிடும்போது எமதர்ம ராஜா வருவதாகவும் அந்த ஊரிலுள்ள எவரோ ஒருவர் மண்டையை போடப்போவதாகவும் ஒருசிலர் சொல்லிக்கொள்வர்.
உண்மையில் என்னதான் நடக்கிறது?
உங்கள் வீட்டு கடிகாரத்தின் டிக் டிக் ஓசையானது பகலில் கேட்காது. காரணம் பகலில் பல்வேறு ஒலியலைகள் வளியிடையே பயணித்துக் கொண்டிருக்கும். ஆனால் இரவில் மிக தெளிவாக கேட்கும். ஏனெனில் ஊரே அடங்கியிருப்பதால் ஒலியலைகளின் செறிவு குறைவு.
இது மிக குறைந்த டெசிபல் ஒலியையும் உணரக்கூடிய நாய்க்கு மேலும் மேலும் பயத்தை உண்டுபண்ணக்கூடியது.
ஒரு சிறிய ஒலி கூட நாயை இரவில் பயப்படவைக்கும். இதனால் நாய் பலமாக குரைக்க ஆரம்பிக்கும். காரணம் தன் எதிர்ப்பை காட்ட. அல்லது பயமுறுத்த.
மேலும் இரவில் சிறிய நிழல் அசைந்தால்கூட நாய் எச்சரிக்கையாகி விடுகிறது. அதனால் அந்த நிழல் தெரிந்த பகுதியை நோக்கி குரைக்க ஆரம்பிக்கும். ஆனால் எங்களுக்கோ அங்கே எதுவும் தெரியாது. உடனடியாக அதை பேய் என்று நினைத்துவிடுகிறோம். அவ்வளவுதான்.