தமிழ்நாடு

கணினி மையங்களுக்கு எச்சரிக்கை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள கணினி மையங்களில் சான்றிதழ்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெற பொதுமக்களிடம் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை பெற வட்டாட்சியர் அலுவலக இ-சேவை மையங்கள், கூட்டுறவு சங்க இ-சேவை மையங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் இ-சேவை மையங்களை மக்கள் அணுக வேண்டும். ஆனால் சில தனியார் கணினி மையங்களில் சான்றிதழ்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெற பொதுமக்களிடம் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிப்பதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் வெளியிட்ட அறிவிப்பின் படி, நாமக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் பல தனியார் கணினி மையங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மட்டும் உருவாக்கிய சிட்டிசன் நுழைவை முறையாக அரசு அனுமதி பெறாமல் 20 வகையான வருவாய் துறை சான்றுகள், 6 வகையான முதியோர் உதவித்தொகை போன்ற சான்றுகளை விண்ணப்பிக்கின்றனர்.

அவ்வாறு சான்றுகள் விண்ணப்பிக்கும் போது சான்றுகளில் எழுத்துப்பிழை, தவறான ஆதாரங்களை இணைத்தல் மற்றும் இடைத்தரகர்கள் மூலம் அதிக கட்டணம் பெறுதல் போன்ற முறைகேடுகள் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. அரசு பொது இ-சேவை மையங்களில் வருவாய் துறையின் மூலம் வழங்கப்படும் சான்றிதழ் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய மனு ஒன்றுக்கு ரூ.60-ம், ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய மனு ஒன்றுக்கு ரூ.10-ம், சமூக நலத்துறை மூலம் வழங்கப்படும் திருமண நிதியுதவி, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்ற மனு ஒன்றுக்கு ரூ.120-ம், இணையவழி பட்டா மாறுதல்கள் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்ற மனு ஒன்றுக்கு ரூ.60-ம் சேவை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் தனியார் கணினி மையங்களில் பொதுமக்களிடம் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்தாலோ, சான்றுகள் சம்பந்தமான விளம்பர பலகைகள் வைத்தாலோ அரசு தரப்பில் இருந்து அபராதம் மற்றும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நலத்திட்டங்கள் சான்றிதழ்கள் பெற விண்ணப்பிக்க பொதுமக்கள் இடைத் தரகர்களை தவிர்த்து அருகில் உள்ள வட்டாட்சியர் அலுவலக இ-சேவை மையங்கள், கூட்டுறவு சங்க இ-சேவை மையங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் இ-சேவை மையங்களை அணுக வேண்டும். அங்கு சான்றுகளை விண்ணப்பிக்க அரசு நிர்ணயித்த கட்டணத்தை தவிர கூடுதல் கட்டணம் வசூலித்தால் இணையதளம் மற்றும் 1800 4251333, 1800 4251997 என்ற தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: