தமிழ்நாடு

இயல், இசை, நாடக மன்றத்தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம் – முதல்வர் அறிவிப்பு!!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக இருந்து வந்தவரின் பதவிக்காலம் முடிவு பெற்றுள்ள நிலையில், மன்றத்தின் புதிய தலைவராக வாகை சந்திரசேகர் அவர்களை நியமனம் செய்து முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் இயல், இசை, நாடக மன்றத்தில புதிய தலைவரை நியமித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதாவது இயல், இசை, நாடக மன்றத் தலைவராக தற்போது பொறுப்பில் இருப்பவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதையடுத்து மன்றத்தின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்த தமிழக அரசு திரைப்பட நடிகரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வாகை சந்திரசேகர் அவர்களை நியமித்து, அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவில் கலை மற்றும் பண்பாட்டை வளர்க்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வரும் மத்திய அரசின் சங்கீத நாடக அமைப்பின் நோக்கங்களை தமிழகத்தில் செயல்படுத்தும் வகையில் பழமை வாய்ந்த தமிழ் கலைகளை போற்றி பாதுகாக்க இயல், இசை, நாடக மன்றம் இயங்கி வருகிறது. இந்த மன்றம், தமிழக அரசின் உதவியுடன் கலைஞர்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு கலைப்பணித் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வருகிறது.

அதே சமயத்தில் நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் ‘தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம்’ முன்னாள் முதல்வர் முத்தமிழ் கலைஞர் அவர்களால் கடந்த 2007 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் நாட்டுப்புற கலைகளை அழிய விடாமல் பாதுகாத்து வரும் கலைஞர்களுக்கு சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.

இவ்வாறு சீரும், சிறப்புமாக விளங்கி வரும் இயல், இசை, நாடக மன்றத்தின் தற்போதுள்ள தலைவரது பதவிக்காலம் முடிவடைவதால், அந்த இடத்துக்கு திரு. வாகை சந்திரசேகர் அவர்களை நியமனம் செய்து முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தவிர தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் தலைவராகவும் அவர் பொறுப்பெடுத்து கொள்வார்.

1991 ஆம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருதுக்கு சொந்தக்காரான திரைப்பட நடிகர் வாகை சந்திரசேகர், 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் உறுப்பினர் மற்றும் செயலராக பதவி வகித்திருந்தார். மேலும் தேசிய விருது பெற்ற இவர் 2016 முதல் 2021 வரை வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்திருந்தது குறிப்பிடத்தக்கது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 குறைந்தது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: