இந்தியாஆரோக்கியம்தமிழ்நாடு

மீன் சாப்பிட ஆசையா? நோய்களுக்கு இரையாகப்போறீங்க உஷார்!

தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் உள்ள பல்வேறு மீன் மற்றும் இறால் பண்ணைகள், சுகாதாரமற்ற முறையில் பராமரிக்கப்படுவதால், நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அசைவப் பிரியர்கள் 

உணவுப்ரியர்களில் சைவம், அசைவம் என இரண்டு வகை உண்டு. அதிலும் குறிப்பாக அசைவப்பிரியர்களைப் பொறுத்தவரை, இறைச்சி உணவில் முக்கிய இடம்பிடிப்பது எதுவென்றால் மீன் வகைகள்தான்.

ஏனெனில், உடல் நலத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் எனக் கருதுபவர்களுக்கு கடல் உணவுகள்தான் சிறந்த உணவு. கடல் வாழ் உயிரினங்களான, இறால், மீன், நண்டு உள்ளிட்டவை ஆரோக்கியத்திற்கு அடித்தளம் அமைக்க உதவுகின்றன.

மீன் உணவு 

வாழ்நாள் முழுவதும் கண்ணைப் பாதுகாக்க நினைப்பவர்களின் விருப்ப உணவான மீன் திகழ்கிறது. இதேபோல், குளிர்காலத்தில் வாட்டி வதைக்கும் சளித்தொல்லை நீங்க, நண்டு மிகச் சிறந்த உணவு. இப்படிப் பார்த்தால், பட்டியல் நீளும்.

மீன் பண்ணைகள் 

இந்த அசைவப் பிரியர்களின் ஆசைக்குத் தீனி போடும் வகையில், பீஹார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், அசாம், தமிழகம் உட்பட 10 மாநிலங்களில் ஏராளமான பண்ணைகளில் மீன் மற்றும் இறால் வளர்க்கப்பட்டு வருகின்றன.

பறவைக் காய்ச்சல் பல மாநிலங்களைப் பதம்பார்த்துவிட்ட நிலையில், மீன் மற்றும் இறால் பண்ணைகளை ஆய்வுக் குழுவினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். ஒன்றல்ல, இரண்டல்ல 250 பண்ணைகளில், இந்திய விலங்குகள் பாதுகாப்பு கூட்டமைப்பினர் சமீபத்தில் ஆய்வு நடத்தினர்.

அப்போது அதிர்ச்சியூட்டும் விஷயங்கள் தெரியவந்திருக்கின்றன. இந்த பண்ணைகளில் முறையான சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றாததால், அங்கிருந்து விற்பனைக்கு வரும் மீன் மற்றும் இறால் ஆகியவை, மக்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதாக உள்ளன.

இதுகுறித்து, கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் மெர்டா மெஹ்ரோட்ரா வெளியிட்டுள்ள அறிக்கை:

இம்மாநிலங்களில், நன்னீர் மற்றும் கடல் நீரை பயன்படுத்தி, மீன் மற்றும் இறால் வளர்க்கும் பண்ணைகள் உள்ளன.

இவற்றில் பல பண்ணைகள், விதிமுறைகளை பின்பற்றாமல் சுகாதாரமற்ற முறையில் அமைக்கப்பட்டு உள்ளன.

இப்பண்ணைகளில் இருந்து, கழிவுகளை முறையாக வெளியேற்றுவது இல்லை.

அங்கிருந்து வெளியேறும் கழிவு நீர், நிலத்தடி நீருடன் சேர்வதால், அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.

பீஹாரின் பாட்னா உள்ளிட்ட நகரங்களின், 20 பண்ணைகள் நச்சுத்தன்மையுடன் உள்ளன. இது பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பல பண்ணைகளில் கழிவு நீரை வெளியேற்றாமல், மீண்டும் மீன்களை வளர்க்க பயன்படுத்துகின்றனர். இதனால், மீன்களின் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள், அவற்றை உண்போருக்கும் எதிரொலிக்கும்.

இது போன்ற சுகாதாரமற்ற பண்ணைகளில் வளர்க்கப்படும் மீன் மற்றும் இறால்கள், மக்களுக்கு பல்வேறு நோய்களை உருவாக்கும். இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Back to top button
error: Content is protected !!