தமிழ்நாடுமாவட்டம்

திருமணம் ஆகாமல் கர்ப்பம், மருத்துவமனை போகாமல் பிரசவம்.. கிணற்றில் வீசப்பட்ட குழந்தை.. தாயும் பலியான சோகம்..!

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடியை சேர்ந்தவர் மணியன்-தங்கம் தம்பதி. இவர்களுக்கு 25 வயதில் மங்கையர்கரசி என்ற மகளும், 22 வயதில் காளிதாஸ் என்ற மகனும் உள்ளனர். மங்கையர்கரசி தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் மங்கையர்கரசிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, பழனி அரசு மருத்துவமனையில் அவரை அவரது பெற்றோர் சேர்த்துள்ளனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் திடீரென அதிர்ச்சியடைந்தனர். குழந்தை பிறந்து சில மணி நேரமே ஆன நிலையில் மங்கையர்கரசி அனுமதிக்கப்பட்டது தெரியவந்தது. பெற்றோரை அழைத்து விசாரித்த போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளனர்.

சந்தேகம் அடைந்த மருத்துவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த ஆயக்குடி போலீசார், மணியன் மற்றும் அவரது மனைவி தங்கத்திடம் விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர்கள் அளித்த தகவல் போலீசாரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

04d4d17b2fb03a058580d50251fab021 original

பணிக்கு சென்ற மங்கையர்கரசி, திருமணம் ஆகாமலேயே கருத்தரித்துள்ளார். பெற்றோரிடம் தெரிவிக்காமல் கருவை கலைக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில், ஒரு கட்டத்தில் குழந்தை இருப்பது தெரியவர, பெற்றோரும் தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர். கருவை கலைக்க அவர்களும் முயற்சிகள் எடுத்த நிலையில், அதற்கான கட்டத்தை மங்கையர்கரசி கடந்ததால், அவர்கள் நம்பிய மருத்துவர்கள் சிலரும் கையை விரித்துள்ளனர்.

f52d4523d94eed05e6fa3383e73b61a2 original

 

வெளியில் தெரிந்தால் மானம் போய்விடுமே என எண்ணிய பெற்றோர், வீட்டில் வைத்து யாருக்கும் தெரியாமல் பிரசவம் பார்த்துவிடலாம் என முடிவு செய்துள்ளனர். நேற்று மங்கையர்கரசிக்கு பிரசவ வலி ஏற்பட, வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளனர். அழகான ஆண் குழந்தை பிறந்த நிலையில், குழந்தையை அருகில் உள்ள கிணற்றில் வீசியுள்ளனர். இது ஒருபுறமிருக்க வீட்டில் முறையான பிரசவம் பார்க்காததால் பாதிக்கப்பட்ட மங்கையர்கரசிக்கு ரத்தபோக்கு ஏற்பட்டு மயங்கியுள்ளார்.

முயன்றும் எதுவும் செய்ய முடியாததால் வேறு வழியின்றி அவரை அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து வந்துள்ளனர். விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே சிகிச்சையிலிருந்த மங்கையர்கரசியும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரிடம் போலீசார் விசாரணை எதுவும் நடத்த முடியாத சூழலில், இவ்வழக்கில் போலீசாருக்கு பல்வேறு சந்தேகம் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி பல குற்ற தண்டனை செயல்களும் இந்த வழக்கில் இணைந்துள்ளது.

5ebbd3e74480762e4cccb57f47c1fb1e original

மங்கையர்கரசிக்கு சட்டவிதிகளை மீறி கருக்கலைக்க முயன்ற போது உதவியது யார்? வீட்டில் பெற்றோர் மட்டும் பிரசவம் பார்த்தார்களா அல்லது வேறு மருத்துவ பணியாளர்கள் யாரும் உதவினார்களா? வீசப்பட்ட குழந்தை முறையான பிரசவம் இல்லாததால் இறந்ததா? அல்லது பிறந்த குழந்தையை கிணற்றில் வீசி கொன்றார்களா? மங்கையர்கரசியின் கர்ப்பத்திற்கு யார் காரணம்? அவர்களின் காதலை பெற்றோர் ஏற்க மறுத்ததால் இந்த சம்பவம் நடந்ததா? என்பன உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு போலீசார் விடை தேடிக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில் கிணற்றில் வீசப்பட்ட குழந்தையின் சடலத்தை தேடி பிரேத பரிசோதனை செய்யும் பணிகளும் நடந்து வருகிறது. தனியார் பள்ளி ஆசிரியை திருமணமாகாமல் கருத்தரித்ததும், கருத்தரித்த குழந்தை கொலையானதும், அடுத்த சில நிமிடங்களில் சம்மந்தப்பட்ட ஆசிரியை இறந்து போனது என சினிமாவை மிஞ்சும் பதபதைக்க வைக்கும் இந்த சம்பவம், ஆயக்குடியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: