தமிழ்நாடு

இன்று சட்டப்பேரவை அனைத்து கட்சி கூட்டம் – முதல்வர் முக ஸ்டாலின் தலைமை!!

தமிழகத்தில் இன்று (12.07.2021) சட்டப்பேரவை கூட்டம் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் காலை 10:30 மணிக்கு சென்னை தலைமையகத்தில் உள்ள கவிஞர் மாளிகையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள 13 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அதிகாரம் பெற்றது. அதனை தொடர்ந்து திமுக தலைவர் முக ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றார். அன்று முதல் தமிழகத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். கொரோனா தடுப்பு பணியில் முழு கவனம் செலுத்தினார். அனைத்து கட்சி உறுப்பினர்கள் அடங்கிய கொரோனா நோய் தடுப்பு ஆலோசனை குழுவை உருவாக்கி பணிகளை தீவிரப்படுத்தினார். மேலும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்.

கடந்த மாதம் டெல்லி சென்ற அவர் தமிழகத்தின் பிரச்சனைகளை பற்றியும், மக்களின் கோரிக்கைகளையும் பிரதமரிடம் முன் வைத்தார். அதில் கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை, நீட் தேர்வு எதிர்ப்பு மற்றும் மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு போன்றவற்றை மனுவாக பிரதமரிடம் அளித்தார். மேலும் இது குறித்து நேரில் கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் சென்னை தலைமையகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் காலை 10.30 மணிக்கு 13 கட்சி உறுப்பினர்களுடன் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் பற்றியும், கொரோனா பேரிடர்கள் பற்றியும் விவாதிக்கப்படவுள்ளது. குறிப்பாக மேகதாது அணை விவகாரம் பற்றி 13 கட்சி உறுப்பினர்களுடன் முக ஸ்டாலின் கலந்துரையாட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மேகதாது அணையின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்று மேகதாது அணை தொடர்பாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது நடைபெறும் சட்டப்பேரவை அனைத்து கட்சி கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: