ஆன்மீகம்

இன்று வளம் தரும் வரலட்சுமி விரதம்!

பாற்கடலில் அவதரித்த மகாலட்சுமி, மகாவிஷ்ணுவை மணந்ததுடன், மகாவிஷ்ணு பூமியில் அவதாரம் செய்தபோது சீதாவாகவும், பத்மாவதியாகவும், துளசியாகவும், ஆண்டாளாகவும் பல்வேறு வடிவங்கள் எடுத்து பூலோகத்திலும், அவரைக் கைபிடித்தாள். செல்வத்தின் அம்சமாக இருந்து, நமக்கு செல்வத்தை வழங்கும் மகாலட்சுமிக்கு நன்றி தெரிவிக்கும் விரதமே வரலட்சுமி விரதம் ஆகும். அதையடுத்து, வரலட்சுமி விரதம் எதற்காக இருக்க வேண்டும், எப்படி இருக்க வேண்டும், அதனால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

வரலட்சுமி விரதம் எதற்காக

தேவலோகத்தில் வசித்து வந்த சித்திரநேமி என்பவள், தேவர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நீதிபதியாக இருந்தவள்.

ஒருசமயம் அவள் தீர்ப்பு சொல்லும்போது, பாரபட்சமாக நடந்து கொண்டாள்.

நீதி வழங்குபவர்கள் எந்த சூழ்நிலையிலும் நடுநிலை தவறக்கூடாது. ஆனால், சித்திரநேமி நீதி வழங்குவதில் இருந்து தவறி விட்டாள்.

அதனால், பார்வதிதேவி அவளுக்கு குஷ்டநோய் ஏற்படும்படி சபித்து விட்டாள். அதையடுத்து, சித்திரநேமி சாப விமோசனம் தரும்படி கேட்டாள்.

வரலட்சுமி விரதம் இருந்து வழிபட்டால் விமோசனம் கிடைக்கும் என்றாள்.

அதன்படி சித்திரநேமி, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கி, நோய் நீங்கப்பெற்றாள்.

வேலையிலோ, குடும்ப விவகாரத்திலோ நடுநிலை தவறியவர்கள் கண்டிப்பாக வரலட்சுமி விரதம் இருக்க வேண்டும்.

எவ்வாறு இருப்பது

வரலட்சுமி விரத பூஜையை வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலையில் உங்கள் வசதிக்கு ஏற்ப செய்யலாம். வேலைக்கு செல்பவர்கள் மாலை நேரத்தில் வரலட்சுமி விரத பூஜை செய்யலாம்.

வரலட்சுமி விரதம் இருப்பவர்கள் வீட்டின் தென்கிழக்கு மூலையில் சிறு மண்டபம் அமைத்துக் கொள்ள வேண்டும். அவ்விடத்தில் ஒரு பலகையை வைத்து அதில் சந்தனத்தில் செய்த லட்சுமியின் படம் அல்லது சிலையை வைக்கவேண்டும்.

பின்னர், மகாலட்சுமி உருவத்திற்கு மஞ்சள் ஆடை அணிவித்து, தாழம்பூவால் அலங்காரம் செய்து, எதிரில் வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும்.

புனித நீர் நிரம்பிய கும்பத்தை அரிசியின் நடுவில் வைக்க வேண்டும். தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பழங்கள், வெற்றிலை, பாக்கு, தங்க நகை ஆகியவற்றையும் இலையில் படைக்க வேண்டும்.

அதைத்தொடர்ந்து, முதலில் விநாயகர் பூஜையை நடத்த வேண்டும். அதன்பிறகு வரலட்சுமி பூஜை செய்ய வேண்டும்.

பொங்கல், பாயாசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு ஆகிய நிவேதனப்பொருட்களை கலசம் முன் வைக்க வேண்டும். ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், திராட்சை ஆகிய பழ வகைகளையும் நிவேதனமாக வைக்கலாம்.

அதன்பிறகு வாசலில் உள்நிலைப்படி அருகே நின்று வெளியில் நோக்கி கற்பூர ஆரத்தி காட்டி மகாலட்சுமியை வீட்டுக்குள் வருமாறு அழைக்க வேண்டும்.

இதையும் படிங்க:  ஏழு சக்கரங்களும் அம்பாளின் தியானமும்!

மகாலட்சுமி வீட்டுக்குள் வந்துவிட்டதாக பாவனை செய்து, பூஜையில் உள்ள கலசத்தில் அமர்ந்து அருள்புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு ஆவாஹனம் செய்ய வேண்டும்.

இப்போது மகாலட்சுமி உங்கள் வீட்டுக்குள் வந்து விட்டதாக நினைத்து, அன்னைக்கு மனம் குளிர பூஜைகள் செய்ய வேண்டும். அப்போது மகாலட்சுமிக்கு உரிய பாடல்களைப் பாடலாம்.

இதையடுத்து நோன்புக் கயிறை கும்பத்தை சாற்றி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். லட்சுமியின் 108 போற்றி மற்றும் லட்சுமி அஷ்டோத்ரம் படிக்கலாம்.

மகாலட்சுமி தாயே எங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும். எங்களுக்கு எல்லா செல்வங்களையும் தர வேண்டும் என்று மனம் உருகி வணங்கிய பின்னர் பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

குடும்பத்தில் உள்ள மூத்த சுமங்கலிப் பெண்களுக்கு முதலில் பிரசாதம் கொடுத்து, இளம் பெண்கள் ஆசி பெற்றுக் கொள்ள வேண்டும்.

வரலட்சுமி விரத பூஜையை இவ்வாறு முறையாக செய்தால் மகாலட்சுமியின் பரிபூரண அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

என்ன பலன்

வரலட்சுமி விரதத்தன்று, புண்ணிய நதிகளில் நீராடுவது, ஒரு வருடம் தொடர்ந்து வரலட்சுமி விரதம் இருந்த பலன்களை கொடுக்கும்.

கங்கை, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய நதிகளில் அன்று நீராடினால் செல்வச்செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை.

புகுந்த வீட்டு உறவினர்களை மதித்து நடக்கும் பெண்கள், வரலட்சுமி விரதம் இருந்த பலன்களை பெறுவதாக ஐதீகம்.

பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். திருமணதோஷம் உள்ள கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.

பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் வரலட்சுமியின் அருளினால் மக்கட்பேறு பெறுகின்றனர்.

செல்வம், தான்யம், தைரியம், வெற்றி, வீரம், புத்திர பாக்கியம், கல்வி போன்ற செல்வங்கள் அனைத்தும் கிடைக்கும்.

வரலட்சுமி விரதம் கடைபிடிப்பவர்களின் வீட்டில் நான் நிரந்தரமாக வசிப்பேன் என்று திருமகள் அளித்த திருவாக்கு ஆகும். அதனால், இன்று வரலட்சுமி விரத நாளில் (20.8.2021- வெள்ளிக்கிழமை) வரலட்சுமியை வீட்டுக்கு வரவேற்று வழிபடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: