தமிழ்நாடு

இன்று சென்னை தினம்!

சென்னை தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். சென்னை நகரம் தென் இந்தியாவின் நுழைவாயிலாக கருதப்படுகிறது. 1996-ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று.

மதராஸ் பட்டணம்

இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ( சோழமண்டல கடற்கரை) ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி இந்த நகரம் ஏற்படுத்தப்பட்டது. இந்த பகுதியை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்த வெங்கடபதி சகோதரர்கள் இந்த பகுதியைத் தங்களுடைய தந்தையின் பெயரால் சென்னப்பட்டணம் என்று அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.ஆனாலும், ஆரம்பத்தில் மதராஸ் பட்டணம், மதராஸ் என்று அழைக்கப்பட்ட இந்த பகுதி தற்போது சென்னை என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்தியாவின் 4-வது மெட்ரோபாலிடன் நகராக இது விளங்குகிறது.

தமிழ்நாட்டின் தலைநகரமாக திகழும் சென்னை, ஒரு மாவட்டமாகவும் உள்ளது. பல்வேறு மொழிகளைப் பேசும் நவீன காஸ்மோபாலிடன் நகராக சென்னை விளங்குகிறது. பரந்த மணற்பரப்புடன் கூடிய கடற்கரை , பூங்காக்கள் மற்றும் பல்வேறு வரலாற்று சின்னங்களை உள்ளடக்கியதாக சென்னை விளங்குகிறது.

புனித ஜார்ஜ் கோட்டை

புனித ஜார்ஜ் கோட்டை இந்தியாவில் பிரிட்டானியரின் முதலாவது கோட்டையாகும்.பிரான்சிஸ்டே, ஆண்ட்ரூ கோகன் என்ற ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த இரு அதிகாரிகளின் முயற்சியால் 1639-ஆம் ஆண்டில் கரையோர நகரான மதராசில் (இன்றைய சென்னை நகரம்) கட்டத் தொடங்கப்பட்டது. வெறுமனே கிடந்த இப்பகுதியில் கோட்டை கட்டப்பட்டதால், புதிய குடியேற்றங்களும், வணிக நடவடிக்கைகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. இன்றைய சென்னை நகரம் இக்கோட்டையைச் சுற்றியே உருவானது எனக் கூறலாம்.

ஜார்ஜ் டவுன் (George Town)

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் நகர்ப்புறப் பகுதியாகும். புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டபிறகு இங்கு குடியேற்றம் நிகழ்ந்தது; இதுவே சென்னையில் அமைந்த முதல் குடியிருப்புப் பகுதியாகும். குடிமைப்பட்ட காலத்தில் இது கறுப்பர் நகரம் என அழைக்கப்பட்டு வந்தது. 1911-ஆம் ஆண்டில் பிரிட்டானிய மன்னர் ஜார்ஜ் V இந்தியாவின் பேரரசராக முடி சூடியபோது இப்பகுதிக்கு ஜார்ஜ் டவுன் என பெயர் மாற்றப்பட்டது. சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன.

செயின்ட் தாமஸ் கோட்டை

1522-ஆம் ஆண்டில் இங்கு வந்த போத்துக்கீசர்கள் செயின்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதி போத்துக்கீசர் வசம் வந்தது. தற்போதைய சென்னைக்கு வடக்கே புலிக்காடு என்ற பகுதியில் 1612-ஆம் ஆண்டில் அவர்களது குடியிருப்பு உருவானது. 1688-ஆம் ஆண்டில் சென்னை முதல் நகர அவையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையைச் சென்னை பெற்றது. கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது படை நடவடிக்கைகளுக்கான தளமாக இதைப் பயன்படுத்தினார். பின்னர் இது பிரிட்டானிய அரசின் இந்திய குடியிருப்பு பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான சென்னை மாகாணம் என்ற பெயர் பெற்றது.

1746-ஆம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரஞ்சு கைப்பற்றியது. 1749-ஆம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947-ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது. சென்னை மாகாணம் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகரின் பெயரான மதராஸ் 1996-ஆம் ஆண்டு சென்னை என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: