இந்தியா

இப்ப கடவுளுக்கே ஆதார் அட்டை வேணுமாம்.. உ.பி யில் நடந்த வினோத சம்பவம்!

உத்தர பிரதேசத்தில் உள்ள பாண்டா மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரி ஒருவர் அங்குள்ள ராம் ஜானகி கோவிலில் நிர்வாக அதிகாரியாகவும், தலைமை குருக்களாகவும் இருந்து வரும் மஹந்த் ராம்குமார் தாஸ் என்பவரிடம் கடவுளின் ஆதார் அட்டை இருந்தால்தான் உதவி தொகை பெற முடியும் என்று கூறியுள்ளார்.

தனிநபர் அடையாள அட்டையான ஆதார் கார்டு அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக வரி ஏய்ப்பைத் தடுக்கவும், கடன் மோசடிகளைக் குறைக்கவும் பான் கார்டுகளுடன் ஆதாரை இணைக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் வந்துள்ளன. இவ்வாறாகத் தனிநபர் சார்ந்த அனைத்து சேவைகளுக்கும் ஆதார் எண் அவசியமாக உள்ளது.

தற்போது ஆதார் பற்றிய வினோத சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. அங்கு கடவுள் ராம் ஜானகி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் கோதுமை பயிர்கள் செழித்து வளர்ந்திருந்தன. அதில் இருந்து பெறப்பட்ட சுமார் 100 குவிண்டால் கோதுமையை அரசு சந்தை மூலமாக விற்க நிர்வாக அதிகாரியாகவும், தலைமை குருக்களாகவும் இருக்கும் மஹந்த் ராம்குமார் தாஸ் முடிவு செய்தார்.

கோதுமையை விற்க உதவியாளர்களுடன் மாவட்ட அரசு சந்தை அலுவலகத்துக்கு சென்றார். விவரங்களை மூத்த அதிகாரி ஒருவர், மஹந்த் ராம்குமார் தாஸிடம் ஆதார் அட்டை கேட்டார். இவரும் ஆதார் அட்டையை கொடுக்க, வாங்கிய வேகத்தில் அதனை திருப்பி ஒப்படைத்தார் அதிகாரி. உங்க ஆதார் அட்டை தேவையில்லை. கடவுள் ஆதார் அட்டை கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த கோதுமை விளைந்த நிலம் கடவுள் ராம் ஜானகி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே கடவுள் ராம் ஜானகி ஆதார் அட்டைதான் எனக்கு வேணும் என கறாராக சொல்லி உள்ளார். இதைக்கேட்டு அதிர்ந்து போன தலைமை குருக்கள் நொந்துபோய் வீடு திரும்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: